ஐபிஎல் 2018-ன் 35வது போட்டியில் ஆர்சிபி அணியை முதலில் பேட் செய்ய அழைத்த தோனி அருமையான பந்து வீச்சு மாற்றங்களைச் செய்து அந்த அணியை 127 ரன்களுக்கு மட்டுபடுத்தி பிறகு 18 ஓவர்களில் 128/4 என்று தொழில் நேர்த்தியுடன் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.
சாஹலை கடைசியில் ஸ்பின்னுக்கு எதிர்த்திசையில் விளாசி மிட் விக்கெட்டில் ஒரு சிக்சரையும், நோ-பாலில் தோனி எல்பி போல் தெரிந்தது, ஆனால் சாஹல் ஏன் நோ-பால் வீசினார் தெரியவில்லை, அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தில் லாங் ஆஃபில் மீண்டும் தோனி சிக்ஸ். மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப் பாணி சிக்ஸ் 23 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் தோனி 31 நாட் அவுட். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் கெய்ல் அடித்த அதிகபட்ச சிக்சர்களான 25 சிக்சர்களைக் கடந்து 27 சிக்சர்களுடன் தோனி இப்போதைக்கு முன்னிலை வகிக்கிறார்.
எப்படிப்பார்த்தாலும் ஆர்சிபி அணி வெற்றி பெறப்போவதில்லை என்று நாம் நினைக்கும்படியாகவே அந்த அணி ஆடியது, மீண்டும் கோலியின் கேப்டன்சி உத்வேகமற்று, ஒன்றுமேயில்லாமல் மங்கிப்போனது.
கேப்டன் விராட் கோலி (8), அதிக ஆர்சிபி ஸ்கோரை எடுத்த பார்த்திவ் படேல் (53), மந்தீப் சிங் (7) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்கள் 18 ரன்களுக்கு 3 விக்கெட் என்று ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், நேற்று வரை அவர் மீது கடும் கேலிகள், கிண்டல்கள் எழுந்தன, காரணம் அவர் சரியாக ஆடவில்லை, தனது பலமான பீல்டிங்கிலும் கேட்ச்களை விட்டார், ஆனால் இன்று நன்றாக வீசினார். ஆர்சிபியின் சொதப்பல் பேட்டிங்கும் ஒரு காரணம். ஹர்பஜன் சிங் 4 ஓவர்களில் 22 ரன்களுடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்ற மிகப்பெரிய விக்கெட்டுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவரும் ஜடேஜாவும் 8 ஓவர்களை தொடர்ந்து வீசி முடித்து 40 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது ஆர்சிபியை மூழ்கடித்தது.
இந்த வடிவத்தின் முக்கியமான அம்சமே இதுதான் 9.19 என்ற சிக்கனவிகிதம் வைத்திருந்த ஜடேஜா திடீரென மேட்ச் வின்னராகப் பொங்கி எழுந்தார்.
ஆர்சிபியைக் காலி செய்த ஜடேஜா, ஹர்பஜன் சிங்:
பிரெண்டன் மெக்கல்லம், பார்த்திவ் படேல் தொடக்கத்தில் இறங்க, மெக்கல்லம் 5 ரன்களில் இங்கிடி பந்தை சற்றே இறங்கி வந்து ஆட முயன்றார், அவர் ஆஃப் கட்டரை வீச பந்தைத் தொட கொஞ்சம் பிரத்யனப்பட வேண்டியிருந்தது கடைசியில் ஷாட் சரியாக சிக்காமல் தாக்கூரிடம் கேட்ச் ஆனது, இவர் தடுமாறித்தான் இதைப் பிடித்தார்.
ஒரு முனையில் பார்த்திவ் படேல் நன்றாக ஆட விராட் கோலி 3ம் நிலையில் இறங்கினார். ஆனால் அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா வீசிய அவரது முதல் பந்து ரவுண்ட் த விக்கெட்டில் ஆர்ம் பாலாக விழ கோலி கட் செய்ய முயன்று பந்தை விட்டார், பந்து திரும்பும் என்று தவறாக நினைத்தார் கோலி, பவுல்டு ஆகி வெளியேறினார். மந்தீப் சிங் முழு ஆக்ரோஷ ஸ்வீப் ஆடினார் ஆனால் நேராக டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆனது.
ஹர்பஜன் சிங் ஒரு பந்தை டிவில்லியர்ஸுக்கு பிளைட் செய்ய லேசாக ஆஃப் பிரேக் ஆனது, டிவில்லியர்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு ஆயத்தமானது போல் தெரிந்தது, ஆனால் பந்துக்காக அவர் நீள மட்டையை நீட்ட வேண்டியிருந்தது இதில் அவரது பின் கால் கிரீசைத் தாண்ட பந்து அவரைத் தாண்டி தோனியிடம் சென்றது தோனி அருமையான ஸ்டம்பிங்கைச் செய்தார். ஹர்பஜன் சிங்கை சரியான முனையில் தோனி பயன்படுத்தினார். அதேபோல் ஜடேஜாவுக்கும் துல்லியமான களவியூகம், ஆனால் இருவருமே பந்தை அருமையான முறையில் ஆஃப் ஸ்டம்பில் பேட்ஸ்மென் ரீச்சுக்கு வீசாமல் பிட்ச் செய்தனர். துல்லியமாகவும் வீசினர். ஆனால் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்து திரும்பாததே நடந்தது. இருவரும் 8 ஓவர்கள் வீசி 2 பவுண்டரிகளையே கொடுத்தனர். 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் காலி செய்தனர்.
இத்தனை நாட்களாக ஒதுக்கப்பட்ட பார்த்திவ் படேல் பவர் பிளேயில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசினார். டேவிட் வில்லே, லுங்கி இங்கிடியைப் பதம் பார்த்தார். ஒரு சிக்சர் நேராக சிஎஸ்கே வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விஜய்யை நோக்கிச் சென்றது. ஆனாலும் பார்த்திவ் படேல் 41 பந்துகளில்தான் 53 ரன்களை எடுத்தார், இடையிடையே பந்துகளை விரயம் செய்ததும் நடந்தது. இவருக்கு அடுத்தபடியாக இரட்டை இலக்கம் எடுத்த வீரர் டிம் சவுதி, இவர் 89/8லிருந்து ஆர்சிபியின் ஸ்கோரை இல்லையில்லை மதிப்பை உயர்த்தினார், 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் டிம் சவுதி. 20 ஓவர்களில் 127/9.
எளிய இலக்கை விரட்டும் சம்பிரதாயம்: சிக்சர்களுடன் முடித்த ‘தல’
பொதுவாக எந்த வித பரிசோதனை முயற்சிகளையும் செய்யாதவர் தோனி, இந்த முறையும் வாட்சன், ராயுடுவே தொடக்கத்தில் களமிறங்கினர். வாட்சன் 11 ரன்களில் உமேஷ் யாதவ்வின் ராக்கெட் யார்க்கருக்கு பவுல்டு ஆகி வெளியேறினார்.
ராயுடு மீண்டும் நேர்த்தியான பேட்டிங்கில் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 ரன்கள். துருவ் ஷோரி 8 ரன்களில் அதிசிக்கனமாக வீசிய கொலின் டி கிராண்ட்ஹோமிடம் (4-0-16-1) அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு இதற்கு முன் முக்கியமான போட்டிகளில் பவுலிங் தராதது ஏன்? (உஷ்! கண்டுக்காதீங்க). சிஎஸ்கேவுக்கு எதிரான முந்தைய போட்டியில் சரியாக தோனி பேட் செய்யும் போது பவன் நெகி போன்ற ஒன்றுமேயில்லாத பவுலர்களுக்கு கொடுத்ததும்... உஷ்!
இன்று எப்படியிருந்தாலும் தோல்விதான் என்ற போட்டியில் கொலினுக்குப் பவுலிங்!!
தோனி இறங்கினார் ‘தல’ ரசிகர்களின் உற்சாகத்திற்கு இணங்க சிலபல அதிரடி சிக்சர்களுடன் போட்டியை முடித்து வைத்தார், சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம், ஜீரோவிலிருந்து ஹீரோவான ஜடேஜா ஆட்ட நாயகன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago