“உங்களுடன் பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்” - ராகுல் திராவிட் பிரியாவிடை

By செய்திப்பிரிவு

பார்படாஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் ராகுல் திராவிட். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் விளையாடி உள்ளது.

அவரது பயிற்சியாளர் பணி அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணி வீரர்களிடம் அவர் தெரிவித்தது. “நவம்பரில் உலகக் கோப்பை இறுதியில் தோல்வியை தழுவிய பிறகு எனக்கு போன் செய்து பணியில் தொடருமாறு சொன்ன ரோகித்துக்கு இந்நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து பணியாற்றியதை எனது பாக்கியமாக கருதுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியும் கூட. ரோகித்துக்கு நன்றி. நாம் நிறைய பேசி உள்ளோம். விவாதித்தும் உள்ளோம். சில நேரங்களில் கருத்துகளை ஏற்றும், ஏற்காமலும் கூட இருந்துள்ளோம். அனைத்துக்கும் நன்றி.

எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. இருந்தாலும் இந்த உன்னதமான நினைவை எனக்கு வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணம் நம்மால் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.

நீங்கள் கம்பேக் கொடுத்த விதம், களத்தில் கடுமையாக போராடிய விதம், ஒரு அணியாக நாம் செலுத்திய உழைப்பு என அனைத்தையும் எண்ணி நான் பெருமை கொள்கிறேன். கடந்த காலங்களில் நமக்கு ஏமாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். நம்மால் வெற்றிக் கோட்டினை நெருங்கியும், அதனை கடக்க முடியாமல் போயிருக்கலாம்.

ஆனால், இப்போது நாம் எல்லோரும் செய்துள்ள இந்த சாதனையை எண்ணி நம் நாடே பெருமை அடைந்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரையும், நீங்கள் படைத்த சாதனையையும் எண்ணி மக்கள் பெருமை அடைந்துள்ளார்கள்” என அவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், அவர்களது பணி, தன்னுடன் பணியாற்றிய சக பயிற்சியாளர் குழு என அனைவரையும் தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடி தோல்வியை தழுவியது. அப்போது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவில் திராவிட் இருந்துள்ளார். கேப்டன் ரோகித் போன் செய்து பணியில் தொடருமாறு தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தான் டி20 உலக சாம்பியனாக இந்தியா பட்டம் வென்றுள்ளது.

விராட் கோலி இதையும் வெல்ல வேண்டும் - திராவிடின் ஆசை: உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக் கோப்பை என ஐசிசி நடத்தும் 3 வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்துவிட்டார். இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மட்டும்தான் உள்ளது. அதிலும் அவர், கோப்பையை வென்று முழுமை பெற வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE