இங்கிலாந்தை 7 ரன்களில் வென்ற தென் ஆப்பிரிக்கா | T20 WC ‘சூப்பர் 8’ சுற்று

By செய்திப்பிரிவு

செயின்ட் லூசியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் குரூப் - 2 போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் 7 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், பந்து வீச முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டிகாக், 38 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். டேவிட் மில்லர், 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். சிக்கனமாக பந்து வீசிய ரஷித், 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

164 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி என்ற இலக்கை விரட்டியது. சால்ட் மற்றும் பட்லர் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 11 ரன்களில் ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்தார் சால்ட். பேர்ஸ்டோ 16, பட்லர் 17 மற்றும் மொயின் அலி 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 10.2 ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது.

அந்த சூழலில் ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இணைந்து 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு அச்சுறுத்தல் அளித்த அந்த கூட்டணியை ரபாடா தகர்த்தார். லிவிங்ஸ்டனை 33 ரன்களில் வெளியேற்றினார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹாரி ப்ரூக்கை வெளியேற்றினார் நோர்க்கியா. 37 பந்துகளில் 53 ரன்களை அவர் விளாசி இருந்தார். இங்கிலாந்து வெற்றி பெற கடைசி ஐந்து பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ச்சர் 1 ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி விரட்டினார் சாம் கரன். அடுத்த பந்தில் டாட் வைத்தார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்தில் ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்கவில்லை. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவாத அணியாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ரபாடா மற்றும் யான்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். நோர்க்கியா மற்றும் பார்ட்மேன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க அணியின் அபார ஃபீல்டிங் செயல்பாடு காரணமாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை டிகாக் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE