சாதித்தது தோனி படை: சன் ரைசர்ஸை நொறுக்கிய வாட்சனின் சதம்; 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன் சிஎஸ்கே

By இரா.முத்துக்குமார்

 

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் மந்தமாகத் தொடங்கி பிறகு பிரமாதமான, அனாயாச சரவெடி சதத்தின் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதி சென்னை சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன்களாகிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

பிராத்வெய்ட் வீசிய 19வது ஓவரின் 3வது பந்தை கவர் திசையில் ராயுடு தெறிக்கும் பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது, மஞ்சள் நிறம் மைதானத்தை ஆக்ரமித்தது. வாட்சன் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 117 ரன்களெடுத்து இறுதி வரை வீழ்த்த முடியாத வீரராகத் திகழ்ந்தார். அவர் ஈடுபடும் 2வது ஐபிஎல் இறுதிப் போட்டியாகும் இது. 2008ல் தன் தலைமையில் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸை வெல்ல வைத்த வாட்சன் 2018 ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அற்புதமான பேட்டிங்கினால் சிஎஸ்கேவுக்கு இன்னொரு மகுடத்தைப் பெற்றுத்தந்தார். இந்த ஐபிஎல்-ல் வாட்சனின் 2வது சதமாகும். மொத்தமாக 4 ஐபிஎல் சதங்களை அவர் இன்றைய சதத்துடன் எடுத்துள்ளார். ராயுடு 19 பந்துகளில் 16 நாட் அவுட்.

டாஸ் வென்று முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார் தோனி, அந்த அணியில் ஒருவரும் அரைசதம் எடுக்கவில்லை, கேன் வில்லியம்சன் (47) விக்கெட்டை கரன் ஷர்மா வீழ்த்தியது திருப்பு முனையாக அமைய 178 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ், இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 181/2 என்று சன் ரைசர்ஸை ஊதித்தள்ளியது.

முதல் 10 பந்தில் 0... வாட்சன் இன்னிங்ஸைக் கட்டமைத்த விதம்:

 

வயதான வீரர்களைக் கொண்ட அணி என்று பலராலும் கேலி செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியில் தோனி உறுதியாக நம்பிய அனுபவத்தினால்தான் வெற்றியைச் சாதித்தது. ஏனெனில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா வீசிய தொடக்க ஓவர்களில் எந்த இளம் வீரர்களும் விக்கெட்டைப் பறிகொடுத்திருப்பார்கள், முதல் 10 பந்தில் 0-வில் இருந்த வாட்சன் 11வது பந்தை அடித்த பவுண்டரியிலிருந்து திரும்பிப் பார்க்கவேயில்லை. வாட்சனின் சரவெடிக்கு சன்ரைசர்ஸின் சித்தார்த் கவுலின் மோசமான பந்து வீச்சு உதவியது. பிறகு சந்தீப் சர்மா தன் 4வது ஓவரை படுமோசமாக வீச 27 ரன்கள் விளாசினார் வாட்சன். பிராத்வெய்ட் ரெய்னாவை ஷார்ட் பிட்ச் பவுன்சரில் வீழ்த்திய அதே ஓவரில் 1 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார் வாட்சன். இந்த ஓவரை கொஞ்சம் டைட் செய்திருந்தால் கூட கொஞ்சம் நெருக்கடியாக அமைந்திருக்கும், ஆனால் வாட்சன் இருந்த மூடிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த ரணகள அதிரடியிலும் ரஷீத் கானை ஒன்றும் அசைக்கக் கூட முடியவில்லை. அவர் 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார், 4வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 4 ஓவர்களில் 25 என்று முடிந்தார். அவருக்கு இது சிறந்த ஐபிஎல் தொடராக அமைந்தது. அதாவது திட்டம் என்னவெனில் ரஷீத் கான் ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடி கடந்து செல்வதாகும்.

முதல் ஓவரே புவனேஷ்வர்குமார் அதி அற்புதமாக ஸ்விங் செய்து மெய்டன் ஓவரை வீசினார். 2வது ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாக வீசி டுபிளெசிஸின் ஒரு பவுண்டரியுடன் முடித்தார். புவனேஷ்வர் குமார் மீண்டும் ஒரு ஓவரை டைட்டாக வீசி 2 ஓவர்களில் 1 மெய்டன் 5 ரன்கள் என்று நெருக்கடி கொடுக்க வாட்சன் 10 பந்துகளில் 0. தன் 11வது பந்தில் சந்தீப் சர்மாவை பவுலருக்குப் பின்னால் பவுண்டரி அடித்தவர் நிற்கவில்லை, நிறுத்த முடியவில்லை. இதே ஓவரில் டுபிளெசிஸ் சந்தீப்பின் வேகம் குறைக்கப்பட்ட விரலிடுக்கு பந்தில் நேராக பவுலர் தலைக்கு மேல் கொடியேற்ற சந்தீப் சர்மாவே அதனைப் பிடித்தார். குமார் தன் முதல் ஸ்பெல்லில் 3 ஓவர்கள் 9 ரன்கள்தான்!! பவர் பிளே முடிய இருந்த 6வது ஓவரில் ஷேன் வாட்சன் ஆரம்பித்தார். சந்தீப் சர்மாவை டி20 ஸ்டைல் ஷாட்டில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ். பிறகு மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி. இவையெல்லாம் நல்ல பந்துகள் அல்ல என்பது வேறு விஷயம். பவர் பிளே முடிவில் 35/1.

7வது ஓவரில் சித்தார்த் கவுல் சென்னைக்கு திருப்பு முனையை ஏற்படுத்தினார். முதல் பந்தே வாட்சனுக்கு வாகாக அவர் கால்காப்பில் வீச அங்கு போட்டபோதெல்லாம் வாட்சன் தன் வாழ்நாள் முழுக்க ஆன் திசையில் சிக்ஸ் அடித்துள்ளார், இந்தப் பந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. இதே ஓவரில் ரெய்னாவுக்கு இந்தத் தொடர் முழுதும் பவுலர்கள் சில இலவச பவுண்டரிகளை வழங்கியது போல் கவுல் மீண்டும் ஒரு லெக் திசை ஷார்ட் பிட்ச் அசிங்கமான பந்தை வீச பவுண்டரி ஆனது. மீண்டும் லெக் திசையில் ரெய்னா பவுண்டரி அடிக்க ஒரு ஓவரில் 16 ரன்கள். ரஷீத் கான் தன் முதல் ஓவரை டைட்டாக வீச எச்சரிக்கையுடன் 5 ரன்கள்தான் எடுக்கப்பட்டது. ஆனால் கவுல் ஓவரை கட் செய்திருக்க வேண்டிய வில்லியம்சன் மீண்டும் அவரிடமே கொடுக்க மீண்டும் இரண்டு விரலிடுக்கு மெதுவான பந்துகளில் ஒன்று சிக்ஸ், ஒன்று பவுண்டரி. 16 ரன்கள்! கவுல் 2 ஓவர்களில் 32 ரன்கள். ஷாகிப் அல் ஹசன் சற்று தாமதமாகக் கொண்டு வரப்பட மோசமான லெக் திசை பந்து மிட்விக்கெட்டில் வாட்சன் மட்டையிலிருந்து சிக்ஸ் ஆக 33 பந்துகளில் 51 என்று வந்தார் வாட்சன். இதே ஓவரில் ரெய்னாவுக்கும் ஒரு இலவசப் பந்து சிக்ஸ் ஆனது. ஷாகிப் ஒரு ஓவர் 15 ரன்கள்.

12 ஓவர்களில் 104/1 என்று இருந்த போது சந்தீப் சர்மா 13வது ஓவரை வீசினார், ஷேன் வாட்சன் மைதானம் நெடுக பந்தை சிதறடித்தார், புல்டாஸ்கள், வேகம் குறைந்த விரலிடுக்குப் பந்துகள், ஆஃப் வாலி என்று சொதப்பலாக வீச 4,6,6,6, வைடு, 4, என்று 27 ரன்கள் விளாசப்பட்டது.

ரெய்னா ஒரு முனையில் உறுதுணை இன்னிங்சை ஆடி 24 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32 எடுத்து பிராத்வெய்ட்டின் ஷார்ட் பிட்ச் பவுன்சரில் விக்கெட் கீப்பரின் அபாரமான கேட்சுக்கு வெளியேறினார். இதை முதலிலேயே செய்திருக்கலாம். அதே ஓவரில் வாட்சனிடம் பிராத்வெய்ட் சிக்க ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 97 ரன்கள் வந்தார் வாட்சன். பிறகு ரஷீத் கான் பந்தை சிங்கிள் தட்டி 51வது பந்தில் சதம் கண்டார் வாட்சன். சதம் கண்டதைக் கொண்டாட ரஷீத் கானையே 2 பவுண்டரிகள் விளாசினார். மீண்டும் கவுல் வந்தார், கவுல் மீது இவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை மீண்டும் 2 பவுண்டரிகளை விளாசினார். கடைசியில் 19வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரி அடித்தார் ராய்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் 2018 ஐபிஎல் சாம்பியன்கள்!!. புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் 17 ரன்கள் சந்தீப் சர்மா 4 ஓவர்கள் 52 ரன்கள். கவுல் 3ஓவர்களில் 43 ரன்கள். பிராத்வெய்ட் 2.3 ஓவர்களில் 27 ரன்கள், ஆக இவர்கள் மூவரும் சேர்ந்து 9.3 ஓவர்களில் 122 ரன்களை கொடுத்தாகிவிட்டது. எப்படி வெற்றி சாத்தியமாகும், ஷாகிப் அல் ஹசன் 1 ஓவர் 15 ரன்கள். தோனி இறங்க வேண்டிய தேவையில்லாமலேயே சிஎஸ்கே வெற்றி. தோனியின் வெற்றி சிக்சரைப் பார்க்க நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ ஏமாற்றம்தான். ரெய்னா வாட்சன் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 9.3 ஓவர்களில் 117 ரன்களைச் சேர்த்து சன் ரைசர்ஸுக்குக் குழி தோண்டினர்.

சிஎஸ்கே பவுலிங் அபாரம்.. மட்டுப்பட்ட சன் ரைசர்ஸ்

 

சிஎஸ்கேயில் வழக்கம் போல் லுங்கி இங்கிடி, தீபக் சாஹர் மிக அருமையாகத் தொடங்கினர். ஹர்பஜனுக்குப் பதிலாக தோனி, கரன் சர்மாவை எடுத்தது உடனடியாகப் பலன் கொடுத்தது, கோஸ்வாமி இல்லாத 2வது ரன்னை எடுக்கப் போக ஸ்கொயர் லெக்கில் ஓடி வந்து கரண் சர்மா பந்தை தோனியிடம் அடிக்க ரன் அவுட் ஆனார். கரண் சர்மா வேகமான கால்கள் உடையவர். தோனி அவரை எடுத்தது இன்னொரு விதத்திலும் முக்கியத்துவமானது. 3 ஓவர்கள் வீசி 25 ரன்களில் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் அபாயகரமாக திகழ்ந்த போது ஒரு பந்தை வெளியே வீசி இறங்கி வந்தவரை பீட் செய்ய தோனி ஸ்டம்பிங்கை முடித்தார், இது திருப்பு முனை விக்கெட், இன்னொரு முறை தோனியின் அணி மாற்றம் மிக அற்புதமாக வேலை செய்தது.

கோஸ்வாமி அவுட் ஆன பிறகு வில்லியம்சன் தவண் இணைந்து ஸ்கோரை 6 ஓவர்களில் 42/1 என்று கொண்டு வந்தனர்.

25 ரன்கள் எடுத்த தவண் ஜடேஜாவின் முதல் ஓவரில் பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் ஜடேஜாவின் 2வது ஓவர் 2 பவுண்டரிகளோ 1 சிக்சருடன் ஷாகிப், வில்லியம்சன் கையில் சாத்துமுறையாக 17 ரன்கள் வந்தது. சாஹர் தன் அருமையான ஸ்பெல்லை 4 ஓவர்கள் 25 என்று முடித்திருந்தார். பிராவோ 22 ரன்களை 2 ஓவர்களில் விட்டுக் கொடுத்தார்.

36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 எடுத்த வில்லியம்சன் கரண் சர்மாவிடம் ஸ்டம்ப்டு ஆக, யூசுப் பத்தான் இறங்கினார். யூசுப் பத்தான் சில அடிகளைச் சாத்த 12 பந்துகளில் 21 என்றும் ஷாகிப் 13 பந்துகளில் 22 என்றும் 15வது ஓவரில் சன் ரைசர்ஸ் ஸ்கோர் 126/3 என்று இருந்தது. பிராவோவிடம் ஷாகிப் அல் ஹசன் 23 ரன்களில் வெளியேறினார். புல்டாஸை நேராக எப்படி கவரில் ஜடேஜாவிடம் அடித்தார் என்று புரியவில்லை.

யூசுப் பத்தான் 25 பந்துகளில் 45 ரன்கள் என்று நல்ல இன்னிங்சை ஆட, ரஷீத் கானை இறக்கி அவரது பார்மை பயன்படுத்திக் கொள்ளாத வில்லியம்சன் பிராத்வெய்ட்டை இறக்கினார், அவர் 11 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தாலும் 5 பந்துகளை அவர் டாட்பால்களாக விட்டார். ரன்கள் எடுத்த 6 பந்துகலில் 3 சிக்சர்கள் மற்றும் 3 ரன்கள்தான். இந்த டாட்பால்களை விடாமல் 2-3 பவுண்டரிகளை அவர் அடித்திருந்தல் ஒருவேளை 190க்கும் மேல் ஸ்கோர் சென்றிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் லுங்கி இங்கிடி, தாக்கூர் அருமையாக வீசினர். இங்கிடி 4 ஓவர்களில் 26 ரன்கள் ஒரு விக்கெட். 178 ரன்களுக்கு மடிந்தது ஹைதராபாத். ஆனாலும் இந்தப் பிட்சில் இது வெற்றிக்கான ஸ்கோர்தான். வாட்சன் முதல் 10 பந்துகளுக்குப் பிறகு பொங்கி எழுவார் என்று யாருக்குத் தெரியும்.

தோனிக்கு இந்தத் தொடரின் சிறந்த திடீர் முடிவுகளை, புத்தம் புதிய முடிவுகளை எடுத்த சிறந்த சிந்தனைக்கான பரிசு கிடைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்