‘21 டாட் பந்துகள், 4 விக்கெட்கள்’ - தன்சிம் ஹசனின் அபார பந்து வீச்சால் சூப்பர் 8-ல் கால்பதித்தது வங்கதேசம் | T20 WC

By செய்திப்பிரிவு

கிங்ஸ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியின் வெற்றியில் தன்சிம் ஹசன் சாகிப், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 17,மஹ்மதுல்லா 13, ரிஷாத் ஹோசைன் 13, ஜாகர் அலி 12, தஸ்கின் அகமது 12, லிட்டன் தாஸ் 10 ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணி உதிரிகள் வாயிலாக 10 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தது. இதில் 5 வைடுகள், 5 பைஸ்கள் அடங்கும்.

அந்த அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங் ஐரி, ரோஹித் பவுடெல், சந்தீப் லமிச்சான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 107 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் அணியானது தன்சிம் ஹசன் சாகிப், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் 19.2 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குஷால் மல்லா 27, திபேந்திர சிங் ஐரி 25, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆசிப் ஷேக் 17 ரன்கள் சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் நேபாளம் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால் அதன் அந்தஅணி தனது கடைசி 5 விக்கெட்களை 7 ரன்களுக்கு கொத்தாக தாரைவார்த்தது. கடைசி 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினர்.

வங்கதேச அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளரான தன்சிம் ஹசன் சாகிப் 4 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். தன்சிம் ஹசன் சாகிப் 21 டாட் பந்துகளை வீசியிருந்தார். இதன் மூலம் ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக டாட் பந்துகளை வீசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சளாரான அனுபவம் வாய்ந்த முஸ்டாபிஸுர் ரஹ்மான் 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுன் 7 ரன்களை வழங்கி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். முஸ்டாபிஸுர் ரஹ்மான் 20 டாட் பந்துகளை வீசியிருந்தார். 21 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்ற வங்கதேச அணி ‘டி’ பிரிவில் 6 புள்ளிகளுடன் 2-வதுஇடம் பிடித்து கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE