ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்ட நேபாளம் | T20 WC

By செய்திப்பிரிவு

கிங்ஸ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாளம் அணி ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்டது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ‘டி’ பிரிவில்நேற்று கிங்ஸ்டவுனில் நடைபெற்றஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் என்ற நிலையில் மட்டுப்படுத்தியது நேபாளம் அணி.அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27, கேப்டன் எய்டன் மார்க்ரம் 15, குயிண்டன் டி காக் 10 ரன்கள் சேர்த்தனர்.

நேபாளம் அணி தரப்பில் குஷால் புர்டெல் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். திபேந்திர சிங் ஐரி 3 விக்கெட்களை கைப்பற்றினார். 116 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. குஷார் புர்டெல் 13, கேப்டன் ரோஹித் பவுடெல் 0, அனில் ஷா 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு18 ரன்களே தேவையாக இருந்தன.ஆசிப் ஷேக், திபேந்திர சிங்ஐரி களத்தில் இருந்தனர். 18-வது ஓவரை வீசிய தப்ரைஸ் ஷம்ஸி 3-வது பந்தில் திபேந்திர சிங் ஐரியையும் (6), கடைசி பந்தில் ஆசிப் ஷேக்கையும் ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை உருவாக்கினார். ஆசிப் ஷேக் 49 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார்.

இந்த ஓவரில் தப்ரைஸ் ஷம்ஸி 2ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க நேபாளம் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. அன்ரிச்நோர்க்கியா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் 2-வது பந்தில் குஷால் மல்லா (1) போல்டானார். தொடர்ந்து 2 பந்துகளை வீணடித்த சோம்பால் கமி, 5-வதுபந்தை சிக்ஸருக்கு விளாசியதுடன் கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். ஓட்னில் பார்ட்மேன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவையாக இருந்தன.

முதல் இரு பந்துகளையும் வீணடித்த குல்ஷன் ஜா 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில் அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். 2 பந்துகளில் 2 ரன்களே தேவையாக இருந்த நிலையில் 5-வது பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையாக இருந்தநிலையில் பார்ட்மேன் வீசிய பந்துகுல்ஷன் ஜா மட்டையில் சிக்காமல் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் தஞ்சம் அடைந்தது.

அதற்குள் குல்ஷன் ஜா ரன் சேர்க்க விரைந்து ஓடினார். ஆனால்நொடிப்பொழுதில் டி காக் பந்தை நான் ஸ்டிரைக் திசையைநோக்கி எறிந்தார். அதை ஹெய்ன்ரிச் கிளாசன் பிடித்து ஸ்டெம்பை நோக்கி வீச குல்ஷன் ஜா ரன் அவுட் ஆனார். அவர், ஆட்டமிழக்காமல் கிரீஸை கடந்திருந்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கும். ஆனால் அது நிகழவில்லை. முடிவில் நேபாளம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

குல்ஷன் ஜா 6, சோம்பால் கமி 8 ரன்கள் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட அந்த அணி 8 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE