102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்றது இலங்கை

தம்புல்லாவில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை 104 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் ஒரு அபார வெற்றியப் பெற்று பிறகு நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி கண்டு தொடரை இழந்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருநாள் போட்டிகளில் அந்த அணி எடுக்கும் 9வது ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கை இதுவே. தொடர்ந்து ஆடிய இலங்கை தில்ஷனின் அரைசதத்துடன் 104/3 என்று வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. சயீத் அஜ்மல் அணிக்கு மீண்டும் திரும்பியது பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியது.ஆனால் பேட்ஸ்மென்களின் ஆட்டம் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

துவக்கத்தில் மலிங்காவும், தம்மிக பிரசாத்தும் பந்தை நன்றாக ஸ்விங் செய்தனர். தம்புல்லாவில் எப்போதும் பந்துகள் டென்னிஸ் பந்து போல் பவுன்ஸ் ஆகும்.

முதல் 5 ஓவர்களில் தட்டுத் தடுமாறிய பாகிஸ்தான் 6 ரன்களையே எடுத்தது. அதற்குள் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் விக்கெட்டை பிரசாத்திடம் இழந்தது. அதன் பிறகு பாகிஸ்தான் 81/8 என்று ஆனபோது மழை குறுக்கிட்டது. ஆட்டம் 48 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது.

அகமட் ஷேஜாத், அப்ரீடி, உமர் அக்மல் ஆகியோர் மோசமான ஷாட் தேர்வில் அவுட் ஆயினர். ஃபவாத் ஆலம் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் 8 பேட்ஸ்மென்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மலிங்காவிடம் எல்.பி. ஆனார் மொகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ஆனார். 7 இன்னிங்ஸ்களில் 4வது முறையாக ரன் அவுட் ஆனார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா மிடில் ஆர்டர், மற்றும் பின்கள வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தான் 32.1 ஓவரில் 102 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய உபுல் தரங்கா 14 ரன்களில் மொகமது இர்பான் பந்தில் பவுல்டு ஆனார். சங்கக்காரா தொடர்ந்து 3வது முறையாக குறைவான ரன்களில் வெளியேறினார்.

மகேலா ஜெயவர்தனே 26 ரன்களை எடுக்க, வெற்றிக்குத் தேவையான ரன்களை பவுண்டரி மூலம் அடித்த தில்ஷன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் திசர பெரேரா தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE