“இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை” - விடைபெறும் டிரெண்ட் போல்ட்

By செய்திப்பிரிவு

டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் உகாண்டாவை வென்றது நியூஸிலாந்து அணி. இந்நிலையில், இதுவே தான் பங்கேற்று விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை தொடர் என நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

34 வயதான அவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது தேசத்துக்காக 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறுகிறது நியூஸிலாந்து அணி. இந்நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இதுதான் நான் விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். டி20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும். நாங்கள் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியாமல் போனது விரக்தி தருகிறது. தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அவுட் பிளே செய்யப்பட்டோம்.

இந்த தொடரின் விளையாடும் சில அணிகளுடன் நான் விளையாடியது இல்லை. ஆனாலும் சில தரமான அப்செட்களை பார்க்க முடிகிறது. 1 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணியுடனான ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது நேபாளம். இது அணிகளின் தரம் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கமான முடிவுகளை காட்டும் வகையில் உள்ளது.

எங்கள் அணியில் திறன் படைத்த வீரர்கள் பலர் உள்ளனர். இந்த தொடர் நாங்கள் எண்ணியபடி செல்லவில்லை. இருந்தாலும் ஒரு தேசிய அணியாக எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்கிறேன். சவுதி உடன் இணைந்து அதிக ஓவர்களை வீசியது மறக்க முடியாத நினைவாக இருக்கும்” என போல்ட் தெரிவித்தார்.

வரும் திங்கட்கிழமை அன்று பப்புவா நியூ கினியா அணியுடன் நியூஸிலாந்து விளையாடுகிறது. அதுவே போல்ட் பங்கேற்று விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE