டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 5-ம் தேதி தொடக்கம்!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) தலைவர் சஞ்சய் கொம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவையில் இன்று (ஜூன் 14) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன் 8-வது போட்டித் தொடர் ஜூலை 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடக்கிறது. சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இதில் முதல் லீக் போட்டிகள் ஜூலை 5 முதல் 11-ம் தேதி வரை சேலத்திலும், 2-வது லீக் தொடர் ஜூலை 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கோவையிலும், 3-வது லீக் போட்டிகள் ஜூலை 20 முதல் 24-ம் தேதி வரை திருநெல்வேலியிலும், கடைசி லீக் போட்டிகள் ஜூலை 26 முதல் 28 வரை திண்டுக்கல் மாவட்டத்திலும் நடக்கிறது.

மேலும், குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ம் தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 2 மற்றும் 4-ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. ஒவ்வொரு போட்டிகளும் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். அரையிறுதிப் போட்டிகளின் போது மழையால் ஆட்டம் குறுக்கிட்டால் கடந்தாண்டை போல், நடப்பாண்டும் ரிசர்வ் டே பயன்படுத்தப்படும்.

இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பாண்டு திருச்சி கிராண்ட் சோழாஸ் என்ற புதிய பெயரில் புதுப்பொழிவுடன் திருச்சி அணியும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் என்ற பெயரில் களமிறங்குகிறது. மேலும், டி.என்.பி.எல் தொடரில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பழனி, இணை செயலாளர் பாபா, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE