24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ஜெர்மனி - ஸ்காட்லாந்து மோதல்

By செய்திப்பிரிவு

முனிச்: ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் இன்று தொடங்கி வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் போட்டியை நடத்தும்ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, அல்பேனியா அணிகள் உள்ளன.

‘சி’ பிரிவில் ஸ்லோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் அணிகளும், ‘இ’ பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவேக்கியா, ருமேனியா, உக்ரைன் அணிகளும் ‘எஃப்’ பிரிவில் துருக்கி, ஜார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலாஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள்விளையாடும். இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த 12 அணிகளுடன், லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த அணிகளில் இருந்து சிறந்த 4 அணிகள் இணையும். நாக் அவுட் சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்றில் இருந்து 8 அணிகள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி சுற்று ஜூலை 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்தும். அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூலை 14-ம் தேதி பெர்லின் நகரில் நடைபெறுகிறது. மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

யூரோ கால்பந்து திருவிழாவின் ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், கொலோன், டார்ட்மண்ட், டசெல்டார்ஃப், பிராங்பேர்ட், கெல்சென்கிர்சென், ஹாம்பர்க், லைப்சிக், முனிச், ஸ்டட்கார்ட் ஆகிய 10 மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு முனிச் நகரில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொலோன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ஹங்கேரி - சுவிட்சர்லாந்து அணிகளும் இரவு 9.30 மணிக்கு பெர்லின் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின் - குரோஷியா அணிகள் மோதுகின்றன.

2006-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு பிறகு ஜெர்மனியில் பெரிய அளவிலான கால்பந்து போட்டி தற்போதுதான் நடைபெறுகிறது. இம்முறை யூரோ கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கக்கூடிய அணிகளாக பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை கருதப்படுகின்றன. யூரோ கோப்பைக்கான தகுதி சுற்றில் போர்ச்சுகல் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது.

அதேவேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் ஒரு ஆட்டத்தில்கூடதோல்வியை சந்திக்கவில்லை. ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டிருந்தது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் ஜெர்மனி அணி எழுச்சி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்த அணி கடைசியாக பங்கேற்ற 3 பெரிய அளவிலான தொடர்களில்தனது முதல் ஆட்டத்தில் தோல்வியைசந்தித்திருந்தது. தொடக்க ஆட்ட தோல்விகளுக்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண ஜெர்மனி அணி முயற்சிக்கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க கடந்த 3 பெரிய தொடர்களில் ஜெர்மனி அணி இரண்டில் லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது. கடந்த ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹன்ஸி பிளிக் நீக்கப்பட்டு புதியபயிற்சியாளராக ஜூலியன் நாகெல்ஸ்மேன் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் சில ஆட்டங்கள் ஜெர்மனிக்கு சிறப்பாக அமையவில்லை. எனினும் கடந்த மார்ச் மாதம் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி கண்டிருந்தது. இதனால் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு 4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஜெர்மனி களமிறங்குகிறது. தொடக்கத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணியின் நம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.

ஸ்காட்லாந்து அணி தகுதி சுற்றில் 3 முறைசாம்பியனான ஸ்பெயின் மற்றும் நார்வே, ஜார்ஜியா அணிகளை தோற்கடித்து இருந்தது. யூரோ கோப்பை கால்பந்து வரலாற்றில் ஸ்காட்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வதுமுறையாக பங்கேற்பது இதுதான் முதன்முறை. ஆக்ரோஷ ஆட்ட பாணியை கடைபிடிக்கும் ஸ்காட்லாந்து, ஜெர்மனிக்கு கடும் சவால் அளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் சோனி டென் 1 சானலில் காணலாம். சோனி லிவ் செயலியிலும் போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்