ஆர்சிபி ரசிகர்களுடன் தினேஷ் கார்த்திக் உற்சாக செல்ஃபி @ அமெரிக்கா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் போன்றவர்களுடன் இணைந்து ஆங்கில மொழியில் வர்ணனை பணியை கவனித்து வருகிறார்.

இதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். கிரிக்கெட் சார்ந்த தனது கருத்துகள் மூலம் வழக்கம் போலவே பார்வையாளர்களை வெகுவாக அவர் கவர்ந்து வருகிறார். இதற்கு முன்பும் வர்ணனையாளர் பணியை அவர் சிறப்பாக கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 26-ம் தேதி அன்று ஐபிஎல் 2024 சீசன் நிறைவடைந்தது. அதுவே அவர் பங்கேற்று விளையாடிய கடைசி சீசன் என அறிவிக்கப்பட்டது. அவரும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ஆர்சிபி அணிக்காக கடந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 326 ரன்கள் எடுத்திருந்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரெடி 187.36 என இருந்தது. ஆர்சிபி அணிக்காக மொத்தமாக 53 இன்னிங்ஸ்கள் ஆடி 937 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் ஆர்சிபி ரசிகர்களுடன் உற்சாகமாக அவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2024 சீசனை நான்காவது இடத்தில் நிறைவு செய்தது ஆர்சிபி. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அந்த அணி, எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE