கண்கலங்கிய நசீம் ஷா; ஆறுதல் சொன்ன ரோகித் சர்மா | T20 WC

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் ஆட்டத்தில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. முதல் இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆனால், மேற்கொண்டு 38 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.

அதன் பிறகு ஆட்டத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியது. ஆட்டத்தின் வெற்றியாளர் யார் என்ற கணிப்பில் கூட 90 சதவீத ஆதரவை அந்த அணியே பெற்றிருந்தது. ரிஸ்வான் களத்தில் இருக்கும் வரையில் அந்த நம்பிக்கையை அதிகம் கொண்டிருந்தது அந்த அணி. அவர் ஆட்டமிழந்ததும் அனைத்தும் மாறியது.

பும்ரா, ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் பாகிஸ்தான் வசம் இருந்த வெற்றியை இந்தியா தட்டிப் பறித்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, 4 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த அணி பேட் செய்த போது கடைசி ஓவரில் 9-வது பேட்ஸ்மேனாக களத்துக்கு வந்த அவர், 4 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இருந்தும் வெற்றிக் கோட்டை அவரால் கடக்க முடியவில்லை.

தோல்வி கொடுத்த விரக்தியில் கண்கலங்கினார். அவரை ஷாஹின் அப்ரிடி தேற்றினார். ஏனெனில், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான். குரூப் சுற்றில் அடுத்ததாக விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகள் எடுக்கும் புள்ளிகள், நெட் ரன் ரேட் போன்றவற்றை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் முன்னேற முடியும். அது தான் அவருக்கு அந்த வலியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ஆட்டம் முடிந்ததும் கலங்கி நின்ற நசீம் ஷாவின் முதுகில் தட்டிக் கொடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆறுதல் சொல்வது போன்ற படம் ஒன்று சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் ரோகித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த படத்தை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரோகித்தின் உன்னத செயலை பாராட்டி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE