இங்கிலாந்துக்கு தொங்கலில் ‘சூப்பர் 8’ தகுதி: டி20 உலக சாம்பியன் சொதப்பியது எப்படி?

By ஆர்.முத்துக்குமார்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் 17-வது போட்டியில் ஜார்ஜ்டவுன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதின. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் இங்கிலாந்து வழக்கம் போல் ஏமாற்றியது. ஆஸ்திரேலியா இங்கிலாந்தை பந்தாடியது.

ஆஸ்திரேலியா 201 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 165 ரன்கள் எடுத்ததால் தோல்வி அடைந்து, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதை தனக்குத்தானே சிக்கலாக்கிக் கொண்டுள்ளது.

அன்று ஸ்காட்லாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து 10 ஓவர்களில் 90 ரன்கள் என்று இங்கிலாந்தை அச்சுறுத்திய வேளையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு 1 புள்ளிதான் கிடைத்தது. நேற்று தோற்றதன் மூலம் ஓமன், நமீபியா இரு அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட் தான் இங்கிலாந்தின் சூப்பர் 8 தகுதியைத் தீர்மானிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஜாஸ் பட்லர் கேப்டன்சியைப் பார்க்கும் போது நம் தோனியை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 2007 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி 5 டி20 உலகக் கோப்பைகளை தோற்றுள்ளார். இதை யாரும் பேச மாட்டார்கள். அந்த 5 உலகக் கோப்பைகளிலும் தோனி செய்த தவறுகள் ஏராளம். அதே போல்தான் ஜாஸ் பட்லர் தன் கேப்டன்சியில் தவறு மேல் தவறு செய்கிறார்.

குறிப்பாக எதிரணியினர் போட்டு சாத்தி எடுக்கும் போது செயலூக்கமாக எதுவும் செய்யாமல் தோனி போலவே பின்னால் விக்கெட் கீப்பிங்கில் நின்று கொண்டு விழி பிதுங்குகிறார். அல்லது அப்படியே ‘எல்லாம் அவன் செயல்’ என்று விட்டு விடுகிறார். நேற்று டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது பிட்சை சரிவர புரிந்து கொள்ளாமை என்னும் தவறு.

இரண்டாவது டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட் என்ற இரு பெரும் அபாய தொடக்க வீரர்கள் நிற்கும் போது மொயின் அலியிடமும் வில் ஜாக்ஸிடமும் ஓவரைக் கொடுத்து இங்கிலாந்தின் தோல்வியை அங்கேயே நிர்ணயித்து விட்டார். ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசப்பட 22 ரன்களை அவர் கொடுக்க. அதுவும் ஷார்ட் லெக் சைடு பவுண்டரியை இருவரும் டார்கெட் செய்வார்கள் என்று தெரிந்தும் ஸ்பின்னரிடம் பவர் ப்ளேயில் கொடுப்பது தோனி ரக ஈகோயிஸ்டிக் கேப்டன்சியாகும்.

உடனே மார்க் உட்டைக் கொண்டு வந்தார். மார்க் உட், பேட்டர்களை ஏமாற்றும் கலை, நுணுக்கம் தெரியாத பவுலர். மணிக்கு 145-150 கி.மீ வேகத்தில் நேராக பந்தை வீசுவார். வார்னருக்கு நேற்று ஷார்ட் பவுண்டரியில் அடிக்குமாறு வீசி ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரியை தாரை வார்க்க முதல் 5 ஓவர்களில் 70 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கண்டது ஆஸ்திரேலியா. கடைசியாக வார்னரின் மட்டைக்கு அடியில் ஒரு பந்தை மொயீன் அலி சறுக்கிக் கொண்டு செல்லுமாறு வீச பவுல்டு ஆனார்.

ஜோப்ரா ஆர்ச்சர் மே.இ.தீவுகள் வீரர் என்பதால் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அருமையாக தன் பவுலிங்கை மாற்றிக் கொண்டார். ட்ராவிஸ் ஹெட்டை அருமையான கட்டர் பந்தில் பவுல்டு ஆக்கினார். பவர் ப்ளே முடிந்து ஆஸ்திரேலியாவின் மற்ற நிச்சயமற்ற வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியது இங்கிலாந்து மிட்செல் மார்ஷ், (25 பந்தில் 35), கிளென் மேக்ஸ்வெல் (25 பந்தில் 28) சீராக பவுண்டரிகளை அடித்தனர்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த போது 15-வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா, அங்கிருந்தும் இங்கிலாந்து களவியூகம் மற்றும் மிஸ் பீல்டிங் என்று தவறுகளை ஜாஸ் பட்லரால் இழைத்ததில் ஸ்டாய்னிஸ் (30), டிம் டேவிட் (11), மேத்யூ வேட் (17) கடைசி 5 ஓவர்களில் 59 ரன்களை விளாசினர். லியாம் லிவிங்ஸ்டன் மட்டுமே 2 ஓவர் 15 ரன்கள் 1 விக்கெட் என்று சிக்கனமாக வீசினார். ஆர்ச்சர் 4 ஓவர் 28 என்று வித்தியாசம் காட்டினார், மற்றவர்களுக்கெல்லாம் அடி. ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் ரன்களை வாரி வழங்கினர்.

பட்லர், ஃபில் சால்ட் அதிரடியை நிறுத்திய ஆடம் ஸாம்பா - பட்லரும் பில் சால்ட்டும் தொடக்க ஓவர்களில் வெளுத்து வாங்கினர். பட்லர் இறங்கி வந்து ஆடினார். மிட்செல் ஸ்டார்க்கை மிகப்பெரிய சிக்ஸர் அடித்தார் பில் சால்ட். ஸ்டார்க் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். 7 ஓவர்களில் 73 ரன்கள் என்று இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இங்கிலாந்துக்கு எதிரியாக நுழைந்தார் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா.

23 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் விளாசிய அபாய பில் சால்ட் முதலில் அருமையான லெக் பிரேக்கில் ஆஃப் ஸ்டம்ப் பைலை இழந்தார். கட் ஆடப்போனார் பந்து ‘சரக்’கென்று உள்ளே புகுந்தது. உடனேயே பட்லரும் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்த வேளையில் ஸாம்பாவை ஒரு சிக்ஸர் அடித்த பிறகு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பாட் கம்மின்ஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு இங்கிலாந்து பேட்டிங் இலையுதிர் கால மரத்தின் இலைகள் போல் உதிர்ந்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பிக் ஆஃப் த பவுலரும் ஆட்ட நாயகனுமானார் ஆடம் ஸாம்பா. பாட் கம்மின்ஸ் மிகவும் டைட்டாக மிடில் ஓவர்களை வீசி அசத்தினார். மொத்தத்தில் இங்கிலாந்து என்னும் உலக டி20 சாம்பியன் சூப்பர் 8 தகுதி தற்போது தொங்கலில் விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்