இங்கிலாந்தை 36 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா: ஸாம்பா அசத்தல் | T20 WC

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - பி’ ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா.

மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்தனர். வார்னர், 16 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட், 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மார்ஷ் 35 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் 28 ரன்களில் வெளியேறினர். ஸ்டாய்னிஸ் 30 ரன்கள் எடுத்தார். மேத்யூ வேட் 17 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் முதல் முறையாக ஒரு அணி 200+ ரன்கள் எடுப்பது இதுவே முதல்முறை.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர்.

சாலட், 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பட்லர், 42 ரன்களில் அவுட் ஆனார். இருவரையும் ஸாம்பா அவுட் செய்தார். மொயின் அலி 25, ஹாரி ப்ரூக் 20 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்து தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா சார்பில் ஸாம்பா மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஸாம்பா வென்றார். மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் உகாண்டாவுக்கு இடையிலான போட்டியில் 173 ரன்கள் எடுத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE