T20 WC | மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்ட் திறனால் ஓமனை 39 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸின் ஆல்ரவுண்ட் திறனால் ஓமன் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில்முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் பிலால் கான் பந்திலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்களில் மெஹ்ரான் கான் பந்திலும் வெளியேறினர். கிளென் மேக்ஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். 8.3 ஓவர்களில் 50 ரன்களுக்கு3விக்கெட்களை இழந்த நிலையில் தொடக்க வீரரான டேவிட் வார்னருடன் இணைந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடினார்.

தனது 27-வது அரை சதத்தை நிறைவு செய்த டேவிட் வார்னர் 51பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீமுல்லா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் டேவிட் 9 ரன்னில் ரன் அவுட் ஆனார். மட்டையை சுழற்றிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 36 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு சர்வதேச டி 20 அரங்கில் 3-வது அரை சதமாக அமைந்தது. ஓமன் அணி சார்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

165 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஓமன் அணி பவர்பிளேவில் 29 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. மிட்செல் ஸ்டார்க் தனது முதல் ஓவரிலேயே அபாரமான இன்ஸ்விங்கால் பிரதிக் அதாவலேவை(0) வெளியேற்றினார். தொடர்ந்து நேதன் எலிஸ், காஷ்யப் பிரஜாபதியை 7 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய பவர்பிளேவின் கடைசி பந்தில் கேப்டன் அகிப் இலியாஸ் 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவர்களை தொடர்ந்து ஜீஷான் மக்சூத் 1, காலித் கைல் 8, ஷோயிப் கான் 0 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய அயான் கான் 36 ரன்களில் ஆடம் ஸாம்பா பந்திலும், மெஹ்ரான் கான் 27 ரன்களில் ஸ்டாய்னிஸ் பந்திலும் வெளியேறினர். முடிவில் 20 ஓவர்களில் ஓமன் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்களே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

மிட்செல் ஸ்டார்க், நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் தேர்வானார். 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 புள்ளிகளை பெற்றது. அந்த அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (8-ம் தேதி) நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது. அதேவேளையில் ஓமன் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்