T20 WC | சீரற்ற பவுன்ஸர்களால் பேட்ஸ்மேன்கள் காயம்: சர்ச்சையாகும் நியூயார்க் ஆடுகளம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூயார்க்கில் உள்ள நசாவு கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தஅயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்திருந்த மைதானத்தை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஹர்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப் சிங் 2, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினர். எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 1, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த ஆட்டத்தின் போது அயர்லாந்து வீரர் லிட்டில் ஜோஷ் வீசிய பந்து ரோஹித் சர்மாவின் வலது தோள்பட்டையை தாக்கியது. இதனால் காயம் அடைந்த அவர், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ரிஷப் பந்த்தும் வலது முழங்கையில் காயம் அடைந்தார். முன்னதாக அயர்லாந்து அணியின் பேட்டிங்கின் போது பும்ராவின் பந்து வீச்சில் ஹாரி டெக்கர் காயம் அடைந்தார். ரோஹித் சர்மாவின் காயம் தீவிரமானது இல்லை எனவும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், விளையாடுவார் எனவும் இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்பாராத வகையில் பந்துகள் எகிறி வருவதும் இதனால் பேட்ஸ்மேன்கள் காயம் அடைவதும் நியூயார்க் ஆடுகளத்தின் தன்மை குறித்து கிரிக்கெட் நிபுணர்களும், விமர்சகர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தஆடுகளம் டி 20 உலகக் கோப்பை தொடருக்காக செயற்கை முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆடுகளங்களும் ஒரே மாதிரியான தன்மையை கொண்டுள்ளது. மேலும் ஆடுகளங்களில் காணப்படும் விரிசல்கள் பெரியஅளவில் இருப்பதால் பந்துகள் சீரற்ற வகையில் பவுன்ஸ் ஆவதும், அதிக அளவில் ஸ்விங்கும் ஆகின்றன. இதனால் இந்த ஆடுகளத்தில் விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

சர்ச்சையாகி உள்ள இந்த ஆடுகளத்தில் இந்திய அணி மேலும் 2 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. வரும் 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும் இந்திய அணி மோதுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், நியூயார்க் மைதானத்தின் ஆடுகளம் பாதுகாப்பற்றது என விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கூறும்போது, ‘‘அமெரிக்காவில் நிச்சயமாக கிரிக்கெட்டை ஊக்குவிக்க விரும்புகிறோம், ஆனால் நியூயார்க் ஆடுகளம் வீரர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. இந்தியாவில் இதுபோன்ற ஆடுகளம் இருந்தால், நீண்ட காலத்திற்கு அங்கு போட்டிகள் நடத்தப்படாது. இந்த ஆடுகளம் நிச்சயமாக நன்றாக இல்லை. இது இருநாடுகள் இடையே நடத்தப்படும் இருதரப்பு தொடர் கிடையாது. ஐசிசி உலகக் கோப்பை தொடர்” என்றார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் விளையாட்டை நடத்தவது சிறப்பானதுதான். இதை நான் விரும்புகிறேன். ஆனால் நியூயார்க்கில் இதுபோன்ற தரமற்ற ஆடுகளத்தில் வீரர்கள் விளையாட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார்.

நியூயார்க் ஆடுகளத்தின் தன்மையால் ரோஹித் சர்மாவும் குழப்பமடைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் இந்த ஆடுகளத்தில் இருந்து என்ன பெற முடியும் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்போது,“பேட்டிங்கைப் பொறுத்தவரை இது ஒரு சவாலான ஆடுகளம்., ஆனால் இந்த ஆடுகளம்தான் வழங்கப்பட்டுள்ளது. எனவே சமாளிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

இந்த விமர்சனங்களுக்கு ஐசிசி இதுவரைஎந்த பதிலும் அளிக்கவில்லை, மேலும்இந்திய அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ எந்தவித புகாரையும் பதிவுசெய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் ஆடுகளத்தின் தன்மை குறித்து அதிருப்தி நிலவுவது தெளிவாக உள்ளது. இந்த ஆடுகளம் டி 20 கிரிக்கெட்டுக்கு தகுதியற்றது, ஆபத்தானது என இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன்டிபிளவரும் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே செயற்கை ஆடுகளம் போதிய அளவில் பரிசோதிக்கப்படவில்லை என்றும் ஆடுகளத்தில் அதிக அளவிலான போட்டிகள் நடத்தப்படாததால் இன்னும் புதிதாகவே காட்சி அளிப்பதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுவதே பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஆடுகளங்களை முயற்சி செய்யும் போது பரிசோதனைகள் மேற்கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவசர கதியில் ஆடுகளம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததே சிக்கல்களுக்கு காரணம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடுகளத்தில் உள்ள விரிசல்களை சரிசெய்வதற்கு ரோலர் பயன்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு கைகொடுக்க சிறிது காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது. நியூயார்க் ஆடுகளத்தில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ரன்கள் சேர்க்க கடும் சவாலாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் இலங்கை அணி 77 ரன்களில் சுருண்டது. எனினும் இந்த ரன்னையும் தென் ஆப்பிரிக்க அணி சிரமப்பட்டே எடுத்தது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் அயர்லாந்து அணி ரன்கள் சேர்க்க திணறியது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங்கின் பந்துகள் எதிர்பாராத அளவுக்கு ஸ்விங் ஆனது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் யாரேனும் காயம் அடைந்தால் அது ஒட்டுமொத்த அணியின் செயல் திறனையும், திட்டங்களையும் வெகுவாக பாதிக்கக்கூடும். இதுவே தற்போது பெரிய அச்சமாக உருவெடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்