இங்கிலாந்து - ஸ்காட்லாந்து போட்டி மழையால் ரத்து

By செய்திப்பிரிவு

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில்‘பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம்மழை காரணமாக தாமதமாகவே தொடங்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. சுமா 20 நிமிடங்கள் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் 10 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. பேட்டிங்கை தொடர்ந்த ஸ்காட்லாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்தது.

மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் ஜார்ஜ் முன்சே 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணிக்கு திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 109 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை மறுபடியும் குறுக்கிட்டது.

தொடர்ந்து போட்டியை நடத்த முடியாதசூழ்நிலை ஏற்பட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் வரும் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. ஸ்காட்லாந்து தனது 2-வது ஆட்டத்தில் நாளை (7-ம் தேதி) நமீபியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE