T20 WC | நோர்க்கியா அபார பந்துவீச்சு: இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கையை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இந்த போட்டியல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நோர்க்கியா அபாரமாக பந்து வீசி இருந்தார்.

நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. குசல் மென்டிஸ் எடுத்த 19 ரன்கள் மட்டுமே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சார்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். குசல் மென்டிஸ், கமிந்து மென்டிஸ், அசலங்கா, மேத்யூஸ் ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார்.

78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ரீசா ஹென்ரிக்ஸ், மார்க்ரம், டிகாக், ஸ்டப்ஸ் என நான்கு பேரின் விக்கெட்டுகளை இலங்கை பவுலர்கள் கைப்பற்றி இருந்தனர். 12.5 ஓவர்களில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இருந்தும் கிளாசன் பொறுப்புடன் ஆடினார். 16.2 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

கடந்த 2014 டி20 உலகக் கோப்பை தொடர் முதலே தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி பெறவில்லை. 2014, 2016 மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. 2022 தொடரில் ஆட்டத்தில் முடிவு எத்தப்படவில்லை. அத்தகைய சூழலில் இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை நோர்க்கியா வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE