T20 WC | சூப்பர் ஓவர் சூப்பர் ஸ்டார்: யார் இந்த 39 வயது டேவிட் வீஸே?

By ஆர்.முத்துக்குமார்

டி20 உலகக் கோப்பையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற குரூப் பி போட்டி த்ரில் போட்டியாகி சூப்பர் ஓவர் வரை சென்றது. அதில் நமீபியா அணியின் ஆல்ரவுண்ட் சூப்பர் ஹீரோவாக எழுச்சி பெற்றார் டேவிட் வீஸே.

முதலில் பேட் செய்த ஓமன் அணி 109 ரன்களுக்கு மடிந்தது. ஆனால் அதன் பிறகு நமீபியா இலக்கை விரட்டும் போது அந்த அணியைத் தண்ணி குடிக்கச் செய்து ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை இட்டுச் சென்றது. ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இதோடு 3வது முறை போட்டி சூப்பர் ஓவருக்குச் செல்கிறது. ஓமனின் அனுபவசாலி பவுலர் பிலால் கானின் பந்து வீச்சில் சூப்பர் ஓவரில் டேவிட் வீஸே, ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் சேர்ந்து 21 ரன்களை விளாசினர்.

வீஸே சூப்பர் ஓவரை முதலில் 2 ரன்களுடன் தொடங்கினார். அடுத்து வந்தது ஒரு ஃபுல் டாஸ் அதை லாங் ஆன் மேல் தூக்கி அடித்தார். எராஸ்மஸ் ஒரு பவுண்டரி விளாசினார். பிறகு யார்க்கர் ஒன்றும் பவுண்டரிக்குப் பறந்தது. மொத்தம் 21 ரன்கள் வந்தது. அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஓமன் வீரர்கள் ஜீஷான் மக்சூத், நசீம் குஷி இருவரும் வீஸேவின் பந்து வீச்சை எதிர்கொண்டனர்.

வீஸே முதல் பந்தை வைடு ஃபுல்டாஸாக வீச நசீம் குஷி அதனை லாங் ஆஃபில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, அருமையான யார்க்கர். பேட்டரால் பவுலர் கையில்தான் அடிக்க முடிந்தது. அது டாட் பால் ஆனது. அடுத்த பந்து நசீம் குஷி அவுட் ஆகி வெளியேறினார். 3 பந்துகளில் 2 ரன்கள்தான் வந்தது. கேப்டன் அகிப் இலியாஸ் இறங்கினார். இவர் ஒரு ரன் எடுக்க மக்சூத் அடுத்த பந்தில் ஒரு ரன் தான் எடுக்க முடிந்தது. ஒன்றை வைட் ஆஃப் த கிரீசிலிருந்தும் இன்னொரு பந்தை ரவுண்ட் த விக்கெட்டிலும் வீசி கட்டுப்படுத்தினார் வீஸே. கடைசி பந்தில் ஒரு புல்டாஸை சிக்சர் அடித்தார் கேப்டன் அகிப், ஆனால் 10 ரன்கள்தான் ஓமனால் எடுக்க முடிந்தது. இறுதியில் தோற்றது.

சூப்பர் ஓவரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சாதித்து சூப்பர் ஓவர் சூப்பர் ஹீரோவான இந்த டேவிட் வீஸேவுக்கு வயது 39 என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்காவுக்கும் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். நமீபியாவுக்கும் ஆடியுள்ளார். நம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஆடினார். நல்ல ஸ்லோ பவுலிங், யார்க்கர் வீசுவதோடு பேட்டிங்கில் காட்டடி அடிப்பவர். ஏகப்பட்ட தனியார் டி20 லீகுகளில் இவர் ஆடியுள்ளார்.

கொழும்பு ஸ்டார்ஸ், கராச்சி கிங்ஸ் போன்ற அணிகளிலும் தடம் பதித்துள்ளார். சசெக்ஸ், டைட்டன்ஸ் போன்ற அணிகளையும் பிரதிநிதித்துவம் செய்தவர். இவர் தனது 30வது வயதில் நியூஸிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவுக்கு 2015ம் ஆண்டு அறிமுகமானார். கடைசி ஒருநாள் போட்டியை நமீபாவுக்காக 2022-ல் ஆடினார்.

2013ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். டி20-யில் இன்னும் ஓய்வு பெறவில்லை. இவர் 2005-ம் ஆண்டிலேயே முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்டார். இதுவரை 15 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் 51 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் 124 முதல் தரப்போட்டிகளில் 5,814 ரன்களையும் பந்து வீச்சில் 344 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2005 முதல் 2020 வரை இவரது முதல்தரக் கிரிக்கெட் பயணம் நீடித்தது.

இவர் 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவில்லை. இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் ஆடக்கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு இங்கிலாந்து கவுண்ட்டி ஆட கோல்பாக் ஒப்பந்தத்தில் சென்றார். நமீபியாக்காரர் என்பதால் 5 ஆண்டுகள் சென்று இவருக்கு நமீபியா அணியில் ஆட வாய்ப்புக் கிடைத்தது. ஜிம்பாப்வேயை 3-2 என்று தோற்கடித்த டி20 தொடரில் வீஸே முக்கிய வீரர். தாக்கம் ஏற்படுத்தக் கூடிய ஆல்ரவுண்டர் இவர். ஸ்லோயர் பந்துகளில் வல்லவர். கடைசியில் இறங்கி பந்துகளைத் தூக்கி அடிப்பவர்.

2013ம் ஆண்டில் இவரை ஜாக் காலீஸுக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்க அணி இலங்கை தொடருக்கு தேர்வு செய்தது. ஆனால் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் உள்நாட்டுக் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார். 2015-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

2015-ல் ஆர்சிபி அணி இவரை $460,000 ஏலம் எடுத்தது. 2019 சீசனில் 50 ஓவர் கிரிக்கெட் ஒன்றில் இங்கிலாந்து கவுண்ட்டியில் சசெக்ஸ் அணிக்காக 126 பந்துகளில் 171 ரன்களை விளாசித்தள்ளியது இவரது ஆகச்சிறந்த பேட்டிங் இன்னிங்ஸ் ஆகும். இந்நிலையில் இவர் இன்று ஓமானுக்கு எதிராக சூப்பர் ஓவர் சூப்பர் ஸ்டாராக ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE