“இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன்” - கவுதம் கம்பீர்

By செய்திப்பிரிவு

அபுதாபி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அடுத்த பயிற்சியாளருக்கான ரேஸில் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் சூழலில் அவரே வெளிப்படையாக இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்தும் வாரியம் ஆஸ்திரேலியர்கள் யாரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

இந்த சூழலில் அபுதாபியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கம்பீர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது. “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கெடு தேதி கடந்த மாதம் நிறைவடைந்தது. அதற்கு கம்பீர் விண்ணப்பித்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர். கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த வாரம் சொல்லியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE