நிறைவேறுமா இந்தியாவின் 2-வது டி20 உலகக் கோப்பை கனவு? - விரிவான அலசல்

By ஆர்.முத்துக்குமார்

ஒவ்வொரு முறை டி20 உலகக் கோப்பை தொடரின் போதும் சில கதைகள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அதில் ‘இந்திய அணிதான் ஃபேவரைட்’ என்ற மந்திரச் சொல்லிற்கு பிராதன இடமுண்டு.

இந்த மந்திரச்சொல் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகமூட்டும் சொல் என்று பலரும் நினைக்கலாம். ஆனால். இது உலகக் கோப்பை விளம்பர உத்திகளில், வியாபார உத்திகளில் ஒன்று என்பதை நம்மில் பலரும் யோசிக்கத் தவறுவோம். கோப்பை இந்தியாவுக்குத்தான் என்ற கனவுகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒளிபரப்பு உரிமைகள் பெற்ற ஊடகங்களும், ஐசிசி உலகக் கோப்பை மீடியா பார்ட்னர்களும் ‘ஆ.. ஊ..’ என்றால் 2007 உலகக் கோப்பையை வென்ற ‘போஸ்டர் பாய்’ தோனியைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். பாகிஸ்தானை வென்ற அந்த கடைசி பந்தையும், அந்த கேட்ச்சையும் காட்டிக் கொண்டே இருப்பார்கள். இதன் மூலம் நம் ஆசையைக் கட்டமைக்கிறது ஊடகங்கள். இந்தியா 2-வது டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நமது ஆசை உண்மையில் கட்டமைக்கப்பட்ட ஆசையாக ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் மறு உற்பத்தி செய்யப்படுகின்றன.

நம் உணர்வுகளுக்கும் அறிவுசார் சிந்தனைகளுக்கும் ஒரு பதிலிதான் கனவு, பதிலி நிறைவேற்றமே கனவு. இன்றைய ஊடகங்கள் கோப்பை குறித்த இந்திய ரசிகர்களின் கனவை முன்கூட்டியே தீர்மானித்து விடுகின்றன. அதனால்தான் தோல்வி ஏற்படும் போது .கடும் கோபாவேசமும் ட்ரால்களும் நிதானமின்றி வெறும் உணர்ச்சிவயமாய் கொட்டுகின்றன.

இது என்ன செய்யும் எனில் ரசிகர்களை ஒரு எண்ண ஓட்டத்தில் ஒரு மனநிலையில் தக்க வைத்துக் கொண்டே இருக்கும் இதனால் எதார்த்தம் பார்வையிலிருந்து நழுவிச்சென்று கொண்டேயிருக்கும். ஒரு வகையான மனப்பிரமை நிலையில் நம்மை ஊடகங்கள் வைத்திருக்கும்.

இது கிரிக்கெட் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, பொதுவாக ஊடகம், எந்த ஒரு ஊடகமும் காட்சி, அச்சு ஊடகம் எதுவாயினும் அரசியல், அன்றாடம் உள்ளிட்ட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் எதார்த்தம் தீர்மானிக்கச் செய்யாமல் நம்மை மன உயிரியாக (Mind Being) எண்ண உயிரியாக மாற்றி வைத்திருக்கும் வேலையைத் திறம்படச் செய்யும். சரி! டி20 உலகக்கோப்பைக்குத் திரும்புவோம்.

2007 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்திய அணி வென்றுள்ளது. தோனியின் பிம்பம் இதனைச் சுற்றியே பின்னப்பட்டு கட்டமைக்கப்பட்டு, ரசிகர்கள் மனதில் அளவுக்கதிகமாகத் திணிக்கப்பட்டுள்ளது.

கனவு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால், எதார்த்தம் என்ன? 2007 டி20 உலகக் கோப்பை தொடர் முதல் உலகக் கோப்பை அதை தோனி வென்றார் என்பதால் அது ஏதோ இந்திய மண்ணுக்கே உரித்தான கோப்பை அதை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பது இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பது போன்ற சொல்லாடல்கள் கட்டமைக்கப்படுகின்றன.

ஆனால், எதார்த்த நிலை என்ன 2007 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு 5 டி20 உலகக் கோப்பைகள் அதாவது 2009, 2010, 2012, 2014, 2016 டி20 உலகக் கோப்பைகளை தோனியினால் வெல்ல முடியவில்லை என்பதே. விராட் கோலியினாலும் முடியவில்லை, ரோகித் சர்மாவினாலும் முடியவில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

ஒவ்வொரு டி20 உலகக் கோப்பையின் போதும் ஊடகச் சொல்லாடல்கள், செய்திகள், பேட்டிகள் போன்றவற்றின் குரல்கள் மாறாதது போலவே இந்திய அணியிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதில்லை. 2024 டி20 உலகக் கோப்பையிலும் பாருங்கள் ரோகித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என்று 6 அல்லது 7 வீரர்கள் பழைய வீரர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்கள் நீண்ட காலமாக ஆடி வருகிறார்கள். ஆனால், ஓர் இந்தியக் கனவான டி20 உலகக் கோப்பை வெல்லும் கனவு இன்னும் நனவாகவில்லை. இவர்கள் ஃபார்மில் இருக்கிறார்கள், நன்றாக ஆடுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்களாலும் இன்னும் முடியவில்லை என்பதுதான் எதார்த்த நிலை.

2008-ம் ஆண்டே ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன, அதன் பிறகு நடந்த எந்த ஒரு டி20 உலகக் கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. ஆகவே இந்த முறை ரோகித் சர்மா மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், கோப்பை என்பது மிக மிகக் கடினமான ஒன்று.

இந்திய அணியிடம் அதற்கான ஆற்றல்கள் உள்ளன. எனவே ‘ஹைப்’களை நம்பாமல் எதார்த்தக் கொள்கையுடன் போட்டிகளை ரசிகர்கள் பார்க்க வேண்டும். வெற்றி என்னும் அதீத நம்பிக்கையும் அது நடக்காமல் போகும் போது தாக்கும் ‘மாஸ் ஹிஸ்டீரியா’வும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்வோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE