டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா மோதல்

By செய்திப்பிரிவு

ஜார்ஜ்டவுன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா கனடா மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9- வது பதிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் இன்று தொடங்கு கிறது. வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனும், 2010-ம் ஆண்டு கோப்பையை வென்ற இங்கிலாந்து, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தலா ஒரு முறை வாகை சூடியுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தொடக்க நாளான இன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அமெரிக்கா, கனடா ஆகிய இரு அணிகளுமே முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் அறிமுகமாகின்றன.

வெளிநாடுகளை பிறப்பிடமாக கொண்ட வீரர்களை அதிகம் கொண்ட அமெரிக்க அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா பயிற்சியாளராக உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மோனங்க் படேல் அணியை வழிநடத்துகிறார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் உலகக் கோப்பை தொடரை அணுகுகிறது அமெரிக்க அணி.

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை 7 டி20 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் 4 வெற்றிகள் சமீபத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட தொடரின் வாயிலாக கிடைக்கப் பெற்றவையாகும். நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரும், 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றவருமான கோரி ஆண்டர்சன் அணிக்கு வலுசேர்க்கிறார்.

கேப்டன் மோனங்க் படேல், குஜராத்தின் ஆனந்த் பகுதியை சேர்ந்தவர். இவர், 2016-ம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அறிமுக வீரராக மோனங்க் படேல் களமிறங்கினார்.

உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் அவர். 6 ஆட்டங்களில் 208 ரன்கள் சேர்த்திருந்தார். ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகளில் விளையாடி இருந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங் மற்றும் டெல்லி, பெங்களூரு அணிகளில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன் மிலிந்த் குமார் மற்றும் மும்பையை பிறப்பிடமாக கொண்ட சவுரப் நேத்ரல்வகர் ஆகியோரும் அமெரிக்க அணியில் உள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட வேகப் பந்துவீச்சாளர் அலி கானும் அமெரிக்க அணிக்காக களமிறங்குகிறார்.

அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக ஆரோன் ஜோன்ஸ் உள்ளார். அவர், அமெரிக்க அணிக்காக 26 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்க அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக திகழ்கிறார். பேட்டிங் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் கடந்த 2012 முதல் 2019-ம் ஆண்டு வரை கனடா அணிக்காக விளையாடினார். இதன் பிறகு அவர், அமெரிக்க அணியில் இணைந்தார். அமெரிக்க அணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் ஆனார்.

கனடா அணி இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாத் பின் ஜாபர் தலைமையில் களமிறங்குகிறது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் ஆரோன் ஜான்சனும் பந்து வீச்சில் சமீர் கலீமும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.

மே.இ.தீவுகள்… டி 20 உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் ஆட்டத்தில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை இணைந்து நடத்தும் மேற்கு இந்தியத் தீவுகள், பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது. 2012, 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் 2021-ம் ஆண்டு தொடரில் சூப்பர் 12 சுற்றில் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்து வெளியேறியது. 2022-ம் ஆண்டு தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது ஸ்காட்லாந்து. அயர்லாந்திடம் தோல்வி அடைந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இம்முறை டேரன் சமி பயிற்சியின் கீழ் மேற்கு இந்தியத் தீவுகள் சொந்த மண்ணில் டி 20 உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது. சமியின் தலைமையின் கீழ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இருமுறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதனால் அந்த அணி இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 257 ரன்களை விளாசி மிரட்டியிருந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் நடுவரிசையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். கேப்டன் ரோவ்மன் பவல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட் என பேட்டிங்கில் அதிரடி பட்டாளங் கள் உள்ளனர். இதில் ரஸ்ஸல், ஐபிஎல் தொடரில் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறந்த பார்மில் இருந்தார். பந்து வீச்சில் ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய், குடகேஷ் மோதி ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

அசாடோல்லா வாலா தலைமையிலான பப்புவா நியூ கினியா 2-வது முறையாக டி 20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குகிறது. அந்த 2021-ம் ஆண்டு தொடரிலும் பங்கேற்றிருந்தது. தற்போதைய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலில் 8 பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்