“பும்ரா மட்டுமே தொடர்ந்து யார்க்கர் வீசுகிறார்” - பிரெட் லீ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பும்ராவை தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக யார்க்கர் வீசுவதில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

“பொதுவாகவே பும்ராவை தவிர அண்மைய காலமாக மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் தொடர்ச்சியாக யார்க்கர் வீசுவதை நம்மால் பார்க்க முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய யார்க்கர் வீசுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன். டெத் ஓவர்களில் அவர்கள் அதனை செய்ய தவறுகிறார்கள்.

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரியான பேலன்ஸ் அவசியம். அதற்காக அணிகள் 110 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகும் புற்கள் நிறைந்த ஆடுகளம் வேண்டுமென நான் கேட்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் 180 முதல் 230 ரன்கள் என்பது நல்ல ரன் தான். ஆனால், இப்போது 265, 270, 277 ரன்கள் எல்லாம் அணிகளால் எடுக்க முடிகிறது. 4 ஓவர்களில் 45 முதல் 50 ரன்கள் வரை பந்து வீச்சாளர்கள் ரன் கொடுப்பது கடினமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

ரன்கள் அதிகம் கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தும் வல்லமை கொண்ட பவுலராக உலக கிரிக்கெட்டில் பும்ரா அறியப்படுகிறார். அவரது பந்துவீச்சு அஸ்திரங்களில் பிரதானமானது யார்க்கர்.

மெக்குர்க் மற்றும் வார்னர் குறித்து: “ஆஸி. அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்றுள்ளார். 22 வயதாகும் அவர் களமாட இன்னும் நேரம் உள்ளது. அவசரம் வேண்டாம் என கருதுகிறேன். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் அவர் இடம் பிடிக்கவில்லை. இருந்தாலும் விளையாடும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

ஆஸி. அணியில் வார்னரின் தேர்வு சரி தான். 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் பெரிய ஃபார்மில் இல்லை. ஆனால், அந்த தொடரின் முடிவில் அவர் தான் தொடர் நாயகன் விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”” என பிரெட் லீ பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE