விராட் கோலி உடனான ஆர்சிபி அனுபவங்களை பகிர்ந்த வில் ஜேக்ஸ்!

By செய்திப்பிரிவு

லண்டன்: அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்தார் இங்கிலாந்து வீரரான வில் ஜேக்ஸ். இந்த சூழலில் ஆர்சிபி அணியின் சீனியர் வீரரான விராட் கோலி உடனான கள அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தான் உடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25-ம் தேதி அன்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஜாஸ் பட்லருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். அந்தப் போட்டியில் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார் வில் ஜேக்ஸ்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்களை ஆர்சிபி வெற்றிகரமாக விரட்ட கோலியுடன் இணைந்து அபாரமாக ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.

”“ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆட்டமும் அற்புதமானதாக இருந்தது. ஆட்டத்தை பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் கள சூழல் போன்றவை இதற்கு காரணம். ஒவ்வொரு போட்டியும் சர்வதேச போட்டியை போலவே இருந்தது.

கோலி, மிகச் சிறந்த ரோல் மாடல் ஆவார். கிரிக்கெட் விளையாட்டு சார்ந்து அவர் வெளிப்படுத்தும் முனைப்பு 100 சதவீதமானதாக இருக்கும். இளம் வீரரான நானும் அவரை போலவே செயல்பட விரும்புகிறேன். அவருடன் இணைந்து பேட் செய்த போது சில நுணுக்கங்களை நான் கற்றுக் கொண்டேன். இலக்கை விரட்டுவது சார்ந்த முக்கிய விவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் அது எனக்கு பெரும் உதவியாக இருக்கும்.

உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென்பது என்னுடைய சிறுவயது கனவு. அதனால் இந்த தொடரில் பங்கேற்பதில் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். அதை இப்போது நெருங்கி உள்ளேன். சரியான வழியில் அனைத்தும் செல்கிறது.

நான் இன்னிங்ஸை ஓப்பன் செய்துள்ளேன். மூன்றாவது பேட்ஸ்மேனாகவும் ஆடியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு கிடைக்கும் ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்ற விரும்புகிறேன். என்னுடைய ஆவரேஜை காட்டிலும் அணி வெல்வதே முக்கியம்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE