ஐபிஎல் இறுதிப் போட்டி: பட்டம் வெல்ல மல்லுக்கட்டும் ஹைதராபாத் - கொல்கத்தா!

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனில்சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது போன்று தகுதி சுற்று 1-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

2012 மற்றும் 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டம்வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணி 2012-ம் ஆண்டு கோப்பையை சேப்பாக்கம் மைதானத்தில்தான் வென்றிருந்தது. அப்போது கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் தற்போது அணியின் ஆலோசகராக இருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தனது கேப்டன் பதவி காலத்தில் காம்பீர் 2014-ம் ஆண்டும் கொல்கத்தா அணிக்கு மகுடம் சூடியிருந்தார். தற்போது ஆலோசகராக மீண்டும் ஒரு முறை கொல்கத்தா அணிக்கு பெருமை சேர்க்க அவர், களவியூகங்களை அமைத்துக் கொடுக்கக்கூடும்.

அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் சுனில் நரேன் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார். அவருடன் தற்போது ரஹ்மனுல்லா குர்பாஸும் இணைந்துள்ள கூடுதல் வலுசேர்த்துள்ளது. தகுதி சுற்று1-ல் ஸ்யேரஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல், நிதிஷ் ராணா ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் தகுதி சுற்று 1-ல் கொல்கத்தா அணி திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்தி ஹைதராபாத் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தது. மிட்செல் ஸ்டார்க் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்த்துள்ளது. அவருடன் இந்திய வீரர்களான ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் சீரான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆந்த்ரே ரஸ்ஸலின் மிதவேகமும் பெரிய அளவில் பலம் சேர்ப்பதாக உள்ளது. சுழற்பந்து வீச்சில்சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர்நடு ஓவர்களில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்துபவர்களாக திகழ்கின்றனர். இதனால் ஒட்டுமொத்த பந்துவீச்சு துறையும் மீண்டும் ஒரு முறைஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக இருக்கக்கூடும்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி சுற்று 1-ல் தோல்வி அடைந்தாலும் தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த தொடர் முழுவதும் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் எழுச்சி காணாத நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதிலும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களான ஷாபாஷ் அகமது, அபிஷேக் சர்மா ஆகியோர் கூட்டாக 8 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி அணியின் வெற்றியில் பிரதான பங்கு வகித்தனர். இவர்களுடைய இடது கை சுழற்பந்து வீச்சு இன்றைய ஆட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தங்களது அனுபவங்களால் சிறப்பாக செயல்படக்கூடியவர்களாக திகழ்கின்றனர். பாட் கம்மின்ஸும் ஆல்ரவுண்டர் திறனால் பலம் சேர்த்து வருகிறார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கடந்த ஆட்டத்தில் செயல்பட்டது சிறந்த பலனை கொடுத்தது. அபிஷேக் சர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம்செலுத்தக்கூடும். கடந்த சில ஆட்டங்களாக மட்டையை சுழற்றி வரும் ராகுல் திரிபாதியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அனைத்து துறையிலும் ஹைதராபாத் அணி மேம்பட்ட திறனை வெளிப்படுத்தும் பட்சத்தினால் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு நிறைவேற வாய்ப்பு உள்ளது.

உத்திகளில் கில்லாடி: கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “எங்கள் அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீருக்கு டி 20 கிரிக்கெட் எவ்வாறு விளையாடப்படுகிறது என்பது குறித்த அபரிமிதமான அறிவு இருப்பதாக நான் உணர்கிறேன். கொல்கத்தா அணிக்காக அவர், இருமுறை பட்டம் வென்று கொடுத்துள்ளார். எதிரணிக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவரது உத்திகள் சரியாக உள்ளன. அவரது அறிவை கொண்டு இறுதிப் போட்டியில் நாங்கள் உத்வேகத்துடன் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

3-வது முறையாக: நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் 3-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. லீக் சுற்றில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி அதன் பின்னர் தகுதி சுற்று 1-ல் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

கைகூடுமா? - பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றிருந்தது. தொழில் முறை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் இம்முறை கேப்டனாக களமிறங்கிய பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்