சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று 2-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 26-ம் தேதி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்துஅசத்தியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற தகுதி சுற்று 1-ல் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாநைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்கள்மீண்டும் மட்டையை சுழற்றக் கூடும்.
நடப்பு சீசனில் டிராவிஸ் ஹெட் 199.42 ஸ்டிரைக்ரேட்டுடன் 533 ரன்களையும், அபிஷேக் சர்மா 207.04ஸ்டிரைக் ரேட்டுடன் 470 ரன்களையும் வேட்டையாடிஉள்ளனர். இவர்கள் கூட்டாக 72 சிக்ஸர்களையும், 96 பவுண்டரிகளையும் விளாசி உள்ளனர்.நடுவரிசையில் பலம் சேர்க்கும் ஹென்ரிச் கிளாசன்180 ஸ்டிரைக் ரேட்டுடன் 413 ரன்கள் சேர்த்துள்ளார். அவர், 32 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார். இவர்களுடன் கடந்த இரு ஆட்டங்களாக ராகுல் திரிபாதியும் பலம் சேர்த்து வருகிறார். பின்வரிசையில் நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.
நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், டெல்லிஅருண் ஜேட்லி மைதானம், மும்பை வான்கடேமைதானம் ஆகியவற்றில் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்தியது. ஆனால் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை துரத்தியபோது 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்திருந்தது.
» “நீங்கள் ஒரு சாம்பியன்” - தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் சித்தார்த் புகழாரம்!
» ஆர்சிபி தோல்வி எதிரொலி: சமூக வலைதளங்களை சுனாமி போல சூழ்ந்த மீம்ஸ்!
இதற்கு காரணம் சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையே ஆகும். இந்த ஆடுகளத்தில் பந்து விரைவாக மட்டைக்கு வராது. பந்துகள் நின்று வருவதால் பேட்ஸ்மேன்கள் தாக்குதல் ஆட்டம் நடத்துவது என்பது சிரமமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடும் சவாலாகவே இருக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஷாபாஷ் அகமது அணியில் இருந்தாலும் அவர், முழுமையாக பயன்படுத்தப்படுவது இல்லை.
எனினும் வேகப்பந்து வீச்சில் நடராஜன் சீரான திறனை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் 18 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விகெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அவர், சேப்பாக்கத்தில் அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடி உள்ளதால் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும். கடந்த இரு ஆட்டங்களிலும் விக்கெட்கள் வீழ்த்தாத புவனேஷ்வர் குமாருடன் பாட் கம்மின்ஸும் சிறப்பாக செயல்பட்டால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் தனது கடைசி 5 ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்த நிலையில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில்ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியானதோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் யஷஸ்விஜெய்ஸ்வால் 45 ரன்கள் சேர்த்து சிறந்த தொடக்கம்அமைத்து கொடுத்தார். டி 20 உலகக் கோப்பை நெருங்குவதால் மேலும் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்துவதில் ஜெய்ஸ்வால் முனைப்பு காட்டக்கூடும்.அதே வேளையில் 4 அரை சதங்களுடன்567 ரன்கள்குவித்துள்ள ரியான் பராக், ஹைதராபாத் அணியின்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
சஞ்சு சாம்சன் கடந்த 3 ஆட்டங்களில் பேட்டிங்கில் 20 ரன்களை கூட எட்டவில்லை. எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர், கூடுதல் பொறுப்புடன் விளையாடுவதில் கவனம் செலுத்தக்கூடும். நடுவரிசையில் துருவ் ஜூரெல் ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கடந்த 2 ஆட்டங்களில் அவர், ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி உள்ளார். ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பொவல் ஆகியோர் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் ரன்கள் சேர்த்துஅணியின் வெற்றிக்கு உதவினர். அதிரடி பேட்ஸ்மேன்களான இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவேஷ் கான், அஸ்வின்ஆகியோர் அற்புதமாக செயல்பட்டிருந்தனர். மற்ற பந்து வீச்சாளர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது என்பதால் இன்றையஆட்டத்தில் யுவேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஹைதராபாத் அணியின் பேட்டிங்வரிசைக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். இதில் அஸ்வின், சேப்பாக்கம் ஆடுகளத்தை நன்கு அறிந்தவர் என்பதால் அவரது உள்ளீடுகள் ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 26-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
பதிலடி கொடுக்குமா? - நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் சுற்றில் கடந்த 2-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின. இதில் 202 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 13 ரன் தேவையாக இருந்த நிலையில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி ஹைதராபாத் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார். இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
தடுமாற்றம்… நடப்பு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 12-ம் தேதி சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியால் 141 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி கவனமுடன் செயல்படக்கூடும்.
முதன்முறையாக..: ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் முதன்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இங்கு ஹைதராபாத் அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
‘தோனி முடிவு என்ன?’ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசிவிஸ்வநாதன் சிஎஸ்கே யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில்,“தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா என்பது எனக்கு தெரியாது. இது தோனி மட்டுமே பதில் அளிக்கக்கூடிய கேள்வி. இந்த விஷயத்தை அவரிடமே விட்டுவிட்டோம். எப்போதுமே தோனி முக்கியமான முடிவுகளை சரியான தருணத்தில் அறிவிக்கக்கூடியவராக அறியப்படுகிறார். அவர் முடிவெடுக்கும்போது நாங்களும் ஒரு முடிவை பெறுவோம். ஆனால் அடுத்த வருடம் தோனி சிஎஸ்கேவுக்காக விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். இதையே ரசிகர்களும், நானும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சேப்பாக்கம் எப்படி? நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற 7 லீக் ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. அதேவேளையில் 2-வது பேட் செய்த அணிகள் 5 முறை வெற்றி கண்டுள்ளன. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகளின் சராசரி ரன் குவிப்பு 170 ஆகவும் 2-வது பேட் செய்த அணிகளின் ரன் குவிப்பு சராசரி 160 ஆகவும் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago