“வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” - இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ஹர்பஜன் சிங் விருப்பம்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

தலைமைப் பயிற்சியாளர் பதவி மீது ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "நான் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வேனா என்று கேட்டால் தெரியவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது வீரர்களுக்கு ட்ரைவ் ஆட சொல்லித் தருவதோ, புல் ஷாட் ஆட சொல்லித்தருவதோ கிடையாது. இதெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். பயிற்சியாளர் பதவி என்பது மேலாண்மை திறன் பற்றியது. கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதற்கு திருப்பித் தர வாய்ப்பு கிடைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் திராவிட் பதவிக் காலம் முடிவு பெறும் நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது பிசிசிஐ.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களையே பயிற்சியாளராக நியமித்து வந்தது பிசிசிஐ. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தற்போது கேகேஆர் அணியின் வழிகாட்டியாக உள்ளார். எனவே, ஐபிஎல் தொடர் முடிந்ததும் கம்பீருடன் பயிற்சியாளர் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பெயர்களும் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்க்கான பரிசீலனையில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE