T20 WC | ஆஸி. அணியில் 'டெல்லி கேபிடல்ஸ்' புகழ் ஜேம்ஸ் பிரேசர் மெக்கர்க்!

By ஆர்.முத்துக்குமார்

ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் இறங்கி விளாசிய அதிரடி இளம் வீரர் ஜேம்ஸ் பிரேசர் மெக்கர்க் ரிசர்வ் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 தொடரில் பவுலர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மெக்கர்க் 9 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை விளாசியது பெரிதல்ல, ஸ்ட்ரைக் ரேட் 234.04 என்பதுதான் பயங்கர ஆச்சரியமான ஒரு விஷயம்.

மெக்கர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் ரிசர்வ் வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் காயம் ஏற்படலாம் என்பதால் மட்டுமல்ல மெக்கர்க்கை டி20 உலகக் கோப்பையில் களமிறக்கவும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி பார்த்துக் கொண்டிருக்கிறது.

தலைமைத் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, "ஐபிஎல் தொடரில் மெக்கர்க்கின் அசர வைக்கும் அதிரடித் திறமைகளைப் பார்த்த பிறகு அவரை விட்டு விட்டு உலகக் கோப்பைக்குச் செல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், பாட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஐபிஎல் பிளே ஆஃப் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் செல்கின்றனர்.

மார்ஷ், வார்னர், அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, மேத்யூ வேட், நாதன் எல்லிஸ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் போன்ற வீரர்கள் சமீபமாக அதிக போட்டிகளில் ஆடவில்லை. இதில் இந்த உலகக் கோப்பையில் கவனிக்க வேண்டிய இன்னொரு வீரர் ஜோஷ் இங்லிஸ்.

ஆஸ்திரேலிய டி20 உலகக் கோப்பை அணி வருமாறு: மிட்செல் மார்ஷ் (கேட்ச்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜாம்பா.

ரிசர்வ் வீரர்கள்: மேத்யூ ஷார்ட், ஜேம்ஸ் பிரேசர் மெக்கர்க்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE