“சன்ரைசர்ஸ் உடனான போட்டி ஆர்சிபி-க்கு திருப்புமுனை தந்தது” - தினேஷ் கார்த்திக்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த சூழலில் நடப்பு சீசனில் தங்கள் அணிக்கு திருப்புமுனை தந்த தருணம் எது என்பதை ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டி எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது என நான் நினைக்கிறேன். பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 287 ரன்களை அந்த அணி குவித்தது. நாங்கள் அதை சேஸ் செய்தோம். 262 ரன்கள் எடுத்தோம். அந்த ஆட்டம் நாங்கள் பேட்டிங் செய்த வகையில் எங்களுக்கு நம்பிக்கை தந்தது. அது திருப்புமுனை தந்தது.

அடுத்த ஆட்டத்தின் முடிவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஒரு ரன்னில் கொல்கத்தா வசம் தோல்வியை தழுவினோம். ஆனால், அது அணியாக எங்களுக்கு நம்பிக்கை அளித்தது.

ஒரு கட்டத்தில் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைக்கு வந்தோம். அப்போது நாம் ஏன் வித்தியாசமான முயற்சிகளை செய்யக் கூடாது என முயன்றோம். நாங்கள் திறன் கொண்ட வீரர்களை கொண்டுள்ள அணி. ஆனாலும் அதை களத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதை நாங்கள் செய்தோம். சீனியர் வீரர்கள் அவர்களது பணியை செய்தார்கள்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நடப்பு சீசனில் 12 இன்னிங்ஸ் ஆடி, 315 ரன்கள் எடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக். 195.65 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE