கட்டுக்கோப்பான பந்துவீச்சு, வலுவான பீல்டிங் மூலம், ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் அணிகளிலேயே பந்துவீச்சில் மிகுந்த வலு உள்ளதாக இருக்கும் அணி என்பதை சன் ரைசர்ஸ் மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக அந்த அணியின் சந்தீப் சர்மா, பாசில் தம்பி, ராஷித் கான்,சாஹிப் அல்ஹசன் ஆகியோரின் பந்துவீச்சு இன்று துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் இருந்தது.
தொடக்கத்திலேயே சன் ரைசர்ஸ் அணி விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் வில்லியம்சன் நிதானமான அரைசதம் அடித்து கவுரமாக ஸ்கோர் குவிக்க உதவியது. வில்லியம்சனுக்கு பின்னால் களமிறங்கிய வீரர்கள் பேட் செய்த விதமும் வேடிக்கையாக இருந்தது. கடைசி 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததை என்ன சொல்ல முடியும். வில்லியம்சனும் விரைவாக ஆட்டமிழந்திருந்தால், சன் ரைசர்ஸ் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கும். ஆட்டநாயகன் விருதை கேன் வில்லியம்சன் பெற்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ரஹானேவுக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாட அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட இல்லாதது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். கடந்த 6 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடுவரிசை வீரர்கள் மிக மோசமாக பேட்டிங் செய்து வருவது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. தோற்றுப்போவோம் என்ற நினைப்போடு விளையாடுபவர்களை என்ன செய்ய முடியும்?
எட்டிக்கூடிய இலக்கு என்கிற போதிலும், முதுகெலும்பில்லாத பேட்டிங், களத்தில் வெற்றிக்காக போராடக்கூடிய குணம் இல்லாத வீரர்கள் இன்மையே ராஜஸ்தானின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைக்கின்றன. ரஹானேவுக்கு துணையாக சாம்ஸனுக்கு அடுத்ததாக ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்மர் ஆகியோரில் ஒருவர் நிலைத்து ஆடி இருந்தாலே வெற்றி கிடைத்திருக்கும்.
கடந்த 7 போட்டிகளில் இதுவரை ஆல்ரவுண்டர் எனச் சொல்லிக்கொள்ளும் பென் ஸ்டோக்ஸ் ஒருபோட்டியில் கூட உருப்படியாக விளையாடவில்லை, சிறந்த பேட்ஸ்மனான பட்லரும் குறிப்பிடும்படியாக ரன்கள் குவிக்கவில்லை.
மீண்டும் முதலிடம்
இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் அணி 2 தோல்வியும், 6 வெற்றிகளையும் பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.
பந்துவீச்சு ஆடுகளம்
ஜெய்பூர் ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. சன் ரைசர்ஸ் அணியில் முகமது நபிக்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இஷ் சோதி அழைக்கப்பட்டு இருந்தார்.
முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஏமாற்றம்
ஷிகர் தவாண், ஹேல்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சுழற்பந்துவீச்சாளர் கவுதம் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டும் சேர்த்தனர். குல்கர்னி வீசிய 2-வது ஓவரில் ஹேல்ஸ் 3 பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.
கடந்த 2 போட்டிகளாக ஏமாற்றிவந்த ஷிகார் தவாண் இந்த போட்டியிலும் விரைவாக ஆட்டமிழந்தார். 6 ரன்கள் சேர்த்த நிலையில், கவுதம் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன், ஹேல்ஸுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் சரிவைத் தடுத்ததால் ரன் வேகமும் குறைந்தது. இதனால் பவர்ப்ளே ஓவரில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
கவுதமின் சுழற்பந்துவீச்சுக்கு இருவரும் பயந்தனர். இதனால், இவரின் ஓவரில் 3 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பென் ஸ்டோக்ஸ், சோதி, உனத்கத் ஆகியோரின் பந்துவீச்சிலும் இருவரும் அதிகமான ரன் சேர்க்க முடியாமல் திணறினர். இதனால் 10 ஓவர்களில் 70 ரன்களையே எட்டியது சன் ரைசர்ஸ் அணி.
பொறுப்பான பேட்டிங்
உனத்கட் வீசிய 12 ஓவரை வில்லியம்சன் சந்தித்தார். கடந்த 10 ஓவர்கள் பொறுமை காட்டியதே இந்த ஓவரில் உடைத்து விட்டார். 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து உனத்கட் பந்துவீச்சை விளாசிவிட்டார் வில்லியம்சன். அதுமட்டுமல்லாமல், 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
ஆர்ச்சர் வீசிய 13-வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் வில்லியம்சன். கவுதம் வீசிய 14-வது ஓவரில் ஹேல்ஸ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 93 ரன்கள் சேர்த்தனர்.
ஆனால், அடுத்த ஓவரிலேயே வில்லியம்சனும் விக்கெட்டை பறிகொடுத்தார். சோதி வீசிய 15-வது ஓவரில் வில்லியம்சன் 63 ரன்களில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பேட்டிங் சொதப்பல்
அதன்பின் வந்த கடைசி வரிசையில் களமிறங்கிய வீரர்கள் மிகுந்த பொறுப்பற்ற நிலையில் வருவதும், போவதுமாக இருந்தனர். ஆர்ச்சர் வீசிய 18-வது ஓவரில் சஹிப்அல் ஹசன் 6 ரன்னிலும், யூசுப் பதான் 2 ரன்னிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். உனத்கட் வீசிய 19 ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில், மணீஷ் பாண்டே ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் ராஷித்கான் 2 ரன்னில் வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. விர்திமான் சாஹா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஹைதராபாத் அணி அடுத்த 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பொறுப்பற்றதனமாக இழந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், கவுதம் 2 விக்கெட்டுகளையும், உனத்கட், சோதி தலா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
சோர்வடைந்த பேட்டிங்
152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரஹானே, திரிபாதி ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.
சந்தீப் சர்மா, சகிப் அல் ஹசன் ஆகியோரின் தொடக்க ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் ரஹானே.தொடக்கத்தில் இருந்தே வேகப்பந்துவீச்சுக்கு திணறிவந்த திரிபாதி 4 ரன்கள் சேர்த்த நிலையில், சந்தீப் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து அதிரடி வீரர் சஞ்சு சாம்ஸன் களமிறங்கினார்.
தான் சந்தித்த முதல் ஓவரிலேயே விளாசலில் ஈடுபட்டார் சாம்ஸன். பாசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார் சாம்ஸன். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி 43 ரன்கள் சேர்த்தது.
திருப்புமுனை விக்கெட்
sunrisersjpgமகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் 100
நிதானமாக பேட் செய்து வந்த சாம்ஸன் 40 ரன்கள் சேர்த்த நிலையில், கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் சன் ரைசர்ஸ் அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரஹானேவை தவிக்கவிட்டனர்.
அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல், பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ்பட்லர் 10 ரன்களில் ராஷித் கானிடம் விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹனே மனம் தளறாமல் பேட் செய்து 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கடைசி 2 ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. வெற்றி பெறக்கூடிய இலக்குதான் என்கிற போதிலும், அதை எதிர்கொண்டு விளையாடுவதற்கு வீரர்கள் இல்லை, ரஹானேவுக்கு துணையாகவும் இல்லை.
கவுல் வீசிய 19-வது ஓவரில் லாம்ரோர் 11 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட்டை சாஹாவிடம் பறிகொடுத்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. பாசில் தம்பி பந்துவீச, கவுதம், ரஹானே இருவரும் களத்தில் இருந்தனர்.
ஒரு திறமையான கேப்டனாக ரஹானே இருந்திருந்தால், ரஹானேவே அனைத்து பந்துகளையும், எதிர்கொண்டு வெற்றிக்கு முயன்றிருக்கலாம். ஆனால், கவுதம் எதிர்கொண்டார். முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்து ரஹானேவிடம் கொடுத்தார். அதை ரஹானை விளாசி இருந்தால், ஆட்டம் பரபரப்பாக அமைந்திருக்கும். ஆனால், ஒரு ரன் எடுத்து மீண்டும கவுதமிடம் கொடுக்க, அடுத்த பந்தில் அவர் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜஸ்தான் அணி 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
ரஹானே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களும், ஆர்ச்சர் ஒரு ரன்னும் சேர்த்து களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
சன் ரைசர்ஸ் தரப்பில் கவுல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago