சுனில் நரைன் காட்டடி; ராணா ஆல்ரவுண்ட் திறமை: ஆர்சிபியை ஊதியது கொல்கத்தா

By ஆர்.முத்துக்குமார்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஊதித்தள்ளியது.

முதலில் பேட் செய்த பெங்களூரு 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.5 ஓவர்களில் 177/6 என்று எளிதில் வென்றது.

இலக்கை விரட்டும் போது சுனில் நரைன் 17 பந்துகளில் அரைசதம் கண்டார். நிதிஷ் ராணா பவுலிங்கில் ஒரே ஓவரில் 11 ரன்கள் கொடுத்தாலும் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, பேட்டிங்கில் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

15வது ஓவர் தொடங்கும் போது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 127/2 என்று நல்ல நிலையில் இருந்தது. ஆனால் நிதிஷ் ராணாவின் ஒரு ஓவர் ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திசை திருப்பியது. அந்த ஓவரில் ராணா 11 ரன்களைக் கொடுத்தாலும் விராட் கோலி, டிவில்லியர்ஸ் (44) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதுதான் திருப்பு முனை.

கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனை வீழ்த்திய பிறகு உமேஷ் யாதவ் உயிரோட்டத்துடன் விறுவிறுவென்று வீசினார். 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட் என்று அவர் அருமையாக வீசினார், ஆனால் கொல்கத்தா தொழில் நேர்த்தியுடன் வென்றது.

சரவெடி வீரர்களுடன் இறங்கிய ஆர்.சி.பி.

பெங்களூரு அணியில் ஒரு கிறிஸ் கெய்ல் இல்லாவிட்டாலும் 10 கெய்ல்கள் இம்முறை உள்ளனர், அவர்களில் பிரெண்டன் மெக்கல்லம், குவிண்டன் டி காக் தொடக்கத்தில் இறங்கினர்.

மெக்கல்லம் தன் வழக்கமான பாணியில் மிடுக்கான மட்டை சுழற்றலில் இறங்கினார். 5 ரன்களில் குவிண்டன் டி காக் மிக சீக்கிரமாகவே தன் ரிவர்ஸ் ஷாட்டைப் பயன்படுத்த சாவ்லாவிடம் வீழ்ந்தார். மெக்கல்லம் இறங்கினாலே தெரியும் ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கு அனுப்பினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அவ்வாறு ஆடி 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். பவர் பிளேயில் ஆர்சிபி 52 ரன்கள் எடுத்தது.

மெக்கல்லம் சுனில் நரைனை புல் ஷாட் ஆட முயன்று பந்தைக் கோட்டைவிட பவுல்டு ஆனார்.

அவரது இடத்துக்கு கடும் பார்மில் இருக்கும் டிவில்லியர்ஸ் வந்தார். இந்தியாவின் சிறந்த ஒருநாள், டி20 ஸ்பின்னரான குல்தீப் யாதவ்வை இறங்கியவுடன் 2 சிக்சர்கள் அடுத்தடுத்து விளாசினார். பிறகு நரைனையும் ஒரு சிக்சர் கவனித்தார், மிட்செல் ஜான்சனை கவருக்கு மேல் அடித்த சிக்ஸ் அலட்சியத்தின் உச்ச கட்டம்.

விராட் கோலி என்ன போட்டி என்று நினைத்து ஆடினார் என்று தெரியவில்லை, அவரது வழக்கத்துக்கு விரோதமாக 33 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சர் என்று 31 ரன்களை மந்தகதியில் எடுத்தார். பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதம் இல்லையெனில் அது டி20-யில் மந்தமான ஆட்டமே.

ஆனாலும் டிவில்லியர்ஸ், கோலி இணைந்து 6 ஓவர்களில் 64 ரன்கள் சேர்க்க டிவில்லியர்ஸ் அதிரடியே காரணம். ஒருவிதத்தில் கோலியின் மந்தமான பேட்டிங்தான் ஆர்சிபியின் இலக்கு குறைந்ததற்குக் காரணமாக அமைந்தது.

பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் ராணாவிடம் அடுத்தடுத்து அவுட்

15வது ஓவரை தினேஷ் கார்த்திக் நம்பிக்கையுடன் ராணாவிடம் கொடுத்தார், ஆனால் முதல் பந்தே டிவில்லியர்ஸ் அவரைப் பளார் என்று பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தும் ஷார்ட் பிட்ச்தான் ஆனால் டிவில்லியர்ஸ் லெக் திசை ஷாட் நேராக மிட்செல் ஜான்சனிடம் கேட்ச் ஆனது. கிராஸ் செய்த கோலி அடுத்த ராணாவின் யார்க்கர் லெந்த் பந்தை தடுத்தாடும் முயற்சியில் தோல்வியடைய பவுல்டு ஆனார். ராணா ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார்.

டிவில்லியர்ஸ் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுக்க, கோலி 33 பந்துகளில் 31 ரன்களையே எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் 44 ரன்கள் வந்ததற்குக் காரணம் மந்தீப் சிங் சூழலுக்கு எதிராக ஆடி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். ஆந்த்ரே ரசல் 2 ஓவர்களில் 10 ரன்களையே கொடுத்த நிலையில் ஏன் ஓவர் முடிக்கப்படவில்லை என்று தெரியவில்லை. தண்ட வினய் குமார் 2 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தார். ஜான்சன், நரைன் சிக்கனமாக வீசினர். ஆர்சிபி 176/7.

சுனில் நரைனின் காட்டடி தர்பார்:

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி போலவே, இப்போதும் சுனில் நரைன், கிறிஸ் லின் இறங்கினர். கோலிக்கு இருவரும் கடந்த ஆண்டு போட்டு புரட்டி எடுத்தது கண் முன்னால் வந்து போகத்தானே செய்யும்? ஆனால் இம்முறை கிறிஸ் லின்னை, கிறிஸ் வோக்ஸ் ஆட்டிப்படைத்து கடைசியில் 5 ரன்களில் அவரை வெளியேற்றினார். ஆனால் கடந்த முறை 15 பந்துகளி அரைசதம் கண்ட சுனில் நரைன், இம்முறையும் சாத்துமுறையில் இறங்கினார்.

ரிஸ்ட் ஸ்பின் சாஹல் பாச்சாவே நரைனிடம் பலிக்கவில்லை. ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று சாஹலுக்கும் கோலிக்கும் அதிர்ச்சித் தொடக்கம் அளித்தார் நரைன்.

ஆனால் கிறிஸ் வோக்ஸ் நரைனை வீழ்த்திவிடுவார் என்று கோலி உண்மையில் நம்பியிருக்கலாம் அந்த நம்பிக்கையையும் உடைத்தார் சுனில் நரைன், கிறிஸ் வோக்ஸை ஒதுங்கிக் கொண்டு சாத்து சாத்தென்று சாத்தினார் நரைன் 20 ரன்களை அவர் ஓவரில் புரட்டி எடுத்தார். 5 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே கொல்கத்தா ஸ்கோர் 50 ரன்களை எட்டியது.

பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று அதற்குள்ளாகவே பட்டம் சூட்டப்பட்ட வாஷிங்டன் சுந்தரையும் சுனில் நரைன் விட்டு வைக்கவில்லை இவருக்கும் சாத்து விழ 17 பந்துகளில் நரைன் 50 ரன்களை எட்டினார்.

உமேஷ் யாதவ்தான் ஆர்சிபியைக் காப்பாற்ற வந்தார் அவர் பந்தை சுனில் நரைன் ஒதுங்கிக் கொண்டு அடிக்கப்போய் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக்கொண்டு வெளியேறினார்.

உத்தப்பா 13 ரன்களில் மோசமான ஷாட்டுக்கு உமேஷிடம் வெளியேறினார். 83/3 என்ற நிலையில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை, ஆனால் ராணா, கார்த்திக் ஜோடி அடுத்த 7 ஓவர்களில் 55 ரன்களைச் சேர்த்தனர். ராணா 2 பவுண்டரிகள் வோக்ஸை அடித்த அபாரமான சிக்ஸுடன் 2 சிக்சர்கள் என்று 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தை பெரிய ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆனார். சற்றே நெருக்கமான தீர்ப்புதான்.

ஆர்கே சிங் 6 ரன்களில் இருந்த போது புல் ஷாட்டில் எட்ஜ் ஆகி வெளியேறினார், ரிவியூவில்தான் அவுட் என்று தெரிந்தது. இந்த பவுன்சர் இந்த ஓவரின் 2வதாகும், நோ-பாலுக்குரியது ஆனால் நடுவர் தூங்கி விட்டார் போலும், ரிவியூவில்தான் விழித்துக் கொண்டனர், வோக்ஸ் பவுன்சர்களாக வீசினாலும் நடுவர் ஒரு பவுன்சர் முடிந்தது என்று சிக்னல் செய்ய வேண்டுமே, அவ்வாறு செய்யவில்லை, மேலும் இன்னொரு பவுன்சர் நோ-பால் கொடுக்கப்படவேண்டும் அதுவும் கொடுக்கப்படவில்லை. அன்று தோனிக்கு பிளம்ப் எல்.பி.க்கு அவுட் தர பயந்தாரே நடுவர் அது போன்று சூப்பர் ஸ்டார் அணிகளுக்கு சாதகமாக நடுவர்கள் இந்தத் தொடரில் செயல்பட வாய்ப்புள்ளது.

146/5 என்ற நிலையிலிருந்து தினேஷ் கார்த்திக் (35 நாட் அவுட்), வினய் குமார் (6 நாட் அவுட்) மேலும் சேதம் ஏற்படாமல் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக ராணாதான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்