“தோனி தனது ஃப்யூச்சரை தீர்மானித்து எங்களிடம் சொல்வார்” - சிஎஸ்கே சிஇஓ

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்த முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில் அவரது ஃப்யூச்சரை அவரே தீர்மானித்து தங்களிடம் சொல்வார் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி சீசனாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஏனெனில், அடுத்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அணிகள் இத்தனை வீரர்களை தான் தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

42 வயதான தோனி, இந்த சீசனின் தொடக்கத்துக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பை கவனித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்றே அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பகிர்ந்து கொண்டது.

“தோனி எங்களிடம் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. அதுபோன்ற விஷயத்தை அவர் எங்களுடன் பேச மாட்டார். அவர் தான் அதனை முடிவு செய்வார்” என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி 161 ரன்களை தோனி எடுத்தார். 10 கேட்ச்களை பிடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220.55. பேட்டிங் சராசரி 53.67. ஆர்சிபி உடனான போட்டி முடிந்தது ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் இருந்து ராஞ்சிக்கு விமானம் மூலம் தோனி பயணித்ததாக தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE