ஒட்டுமொத்த அரங்கையும் வியக்க வைத்த தோனி

By பெ.மாரிமுத்து

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 70 ரன்கள் விளாசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கடைசி 8 பந்துகளில் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது சிராஜ் தந்திரமாக வைடு யார்க்கர் நுட்பத்தை பயன்படுத்தினார். இந்த வகையிலான பந்து வீச்சை பயன்படுத்திதான் பஞ்சாப் அணி வீரர் மொகித் சர்மா இந்த சீசனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தோனியை கடைசி ஓவரில் திணறடித்திருந்தார்.

ஆனால் இம்முறை தோனி இந்த விஷயத்தில் தெளிவுடன் செயல்பட்டார். சிராஜ் வீசிய வைடு யார்க்கரானது தாழ்வான புல்டாசாக எதிர்கொள்வதற்கு சற்று கடினமான வகையிலேயே இருந்தது. ஆனால் களத்தில் வலுவாக வேரூன்றியிருந்த தோனிக்கு அது கடினமானதாக அமையவில்லை. தனது பின்னங்காலை வளைத்து, மட்டையின் முழுபகுதியையும் பயன்படுத்தி பாயிண்ட் திசையில் அற்புதமாக சிக்ஸராக மாற்றினார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதை சரியான நேரத்தில் சாமர்த்தியமாக தோனி கையாண்டதுதான் சிறப்பம்சம். பாயிண்ட் திசையில் அவர், அடித்த இந்த ஷாட்டால் முகமது சிராஜ் ஒரு கணம் அசந்தே போனார்.

அவர் மட்டும் அல்ல பெங்களூரு மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தின் பெரும் பகுதியும், ஏன் எல்லைக் கோட்டுக்கு வெளியே குழுமியிருந்த சிஎஸ்கே வீரர்களும் கூட அசந்தே போனார்கள். தோனியின் திறன் மீது சந்தேகம் கொண்டவர்களையும் அதிசயிக்க வைத்த தருணமாகவே அது அமைந்ததாக கருதப்படுகிறது. கடைசி ஓவரில் கோரே ஆண்டர்சனின் பந்தில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி தோனி வெற்றிக் கனியை பறித்தது, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை கண்முன் கொண்டுவர தவறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “இது தோனியின் சிறப்பு வாய்ந்த ஆட்டம் மற்றும் அற்புதமான வெற்றி. சில அனுபவம் வாய்ந்த வீரர்களை நாங்கள் முதன்முறையாக அணியில் இம்முறை கொண்டுள்ளோம். அவர்கள் அசந்து போகும் அளவுக்கு ஆட்டத்தை முடித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் பாயிண்ட் திசையில் தோனி அடித்த ஷாட், மிகச்சிறப்பாக அடிக்கப்பட்ட 3 ஷாட்களில் இதுவரை நான் பார்க்காத ஒன்றாகும்” என்றார்.

தோனி விளாசிய அந்த சிக்ஸரால் தான் முகமது சிராஜ் பதற்றத்துக்கு உள்ளாகி அடுத்த பந்தை பவுன்சராக வீச அது வைடானது. அடுத்தடுத்து இரு வைடு யார்க்கர்களை வீச முயன்று மேலும் இரு உதிரிகளை வைடு வழியாக வழங்கினார். பொதுவாக இந்த மாதிரியான நேரத்தில் சில பேட்ஸ்மேன்கள் வழியச் சென்று பந்தை தட்டுவார்கள். ஆனால் தோனியோ சமயோஜித புத்தியால் பந்தை எக்காரணத்தைக் கொண்டும் தொட முயற்சிக்கவில்லை.

தோனியின் இந்த சமயோஜித திறன் குறித்து பிளெமிங் கூறுகையில், “பந்து வைடாக வீசப்படும் போது அதை எப்படி அணுக வேண்டும் என்ற திறன் தோனிக்கு உள்ளது. வைடு பந்துகளை அவர், தேடிச் சென்று அடிக்கமாட்டார். இந்த சீசனில் தோனியின் பேட்டிங் அற்புதமாக உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் நான் பார்த்ததிலேயே சிறந்த ஒன்றாகும்” என்றார்.

யுவேந்திரா சாஹல் தனது சிறப்பான மணிக்கட்டு பந்து வீச்சால் சீரான இடைவெளியில் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில்தான் தோனி களம் புகுந்தார். 9 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் அணியின் வெற்றிக்கு 11 ஓவர்களில் 132 ரன்கள் தேவையாக இருந்தது. வழக்கமாக டி 20 ஆட்டங்களில் தோனி தனது பேட்டிங்கை மந்தமாகவே தொடங்குவார். சில ஓவர்கள் களத்தில் நிலைகொண்ட பிறகே அதிலும் கடைசி 3 ஓவர்களிலேயே மட்டையை சுழற்றுவார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக தான் சந்தித்த 2-வது பந்தையே சிக்ஸருக்கு விளாசிய அவர், எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டம் தொய்வு நிலையை அடையாமல் பார்த்துக் கொண்டார்.

மேலும் தோனி, சரியான வகையில் திட்டமிட்டார். எதிரணியில் எந்தெந்த பந்து வீச்சாளருக்கு எவ்வவு ஓவர்கள் மீதம் உள்ளது, எந்த நேரத்தில், யார் பந்து வீச அழைக்கப்படக்கூடும் என யூகம் செய்து கொண்டார். சாஹல் நன்கு வீசிக் கொண்டிருந்ததால் அவரது பந்து வீச்சை தோனி அடித்து விளையாட முயற்சிக்கவில்லை. தோனி களத்தில் நின்ற நேரத்தில் சாஹல் இரு ஓவர்களை வீசி முறையே 7 மற்றும் 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் தோனி மட்டும் 7 பந்துகளை சந்தித்து 7 ரன்களே எடுத்தார். சாஹல் தனது 4 ஓவர்களை முடித்த பிறகு மற்ற பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தோனி ஆதிக்கம் செலுத்தினார்.

குறிப்பாக பவன் நெகி வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த இரு ஷாட்களும் டி வில்லியர்ஸ் அடித்தது போன்று ஸ்வீப் ஆகவோ, ஸ்கூப் ஷாட்டாகவோ இல்லாமல் நிலையாக ஒரே இடத்தில் நின்றவாறு தோனி விளாசியதாகும். அவருக்கு அம்பாட்டி ராயுடுவும் ஒத்துழைக்க அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது ஒரு சிக்ஸராவது விளாசப்பட்டது. முக்கியமாக தோனி மிட்விக்கெட், லாங் ஆஃப் திசைகளை நன்கு பயன்படுத்தினார். ஒரு நிலையான தளம் மற்றும் மென்மையான பந்து வீச்சின் உதவியால் தோனி தனது வலுவான திறனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

கோரே ஆண்டர்சன் ஒவ்வொரு முறையும் பந்தை ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய போதெல்லாம் லாங் ஆன் திசையை நோக்கி தோனி பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொண்டார். அதிலும் கடைசி ஓவரின் 4-வது பந்தை ஆண்டர்சன் வைடு யார்க்கராக வீச முயன்ற போது தோனி ஸ்டெம்புகளை விட்டு நகர்ந்து சென்று லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசிய விதம், அவர் இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸூக்காக காத்திருப்பது போன்ற தோற்றத்தையே வெளிப்படுத்தியது. உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தோனியின் அதிரடி பார்ம் அனைவரையும் சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.

‘அனுபவ பகிர்வு’

வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்த தோனி கூறும்போது, “இலக்கை விரட்டும் போது எதிரணியில் எந்த பந்து வீச்சாளர்களுக்கு எத்தனை ஓவர்கள் மீதமிருக்கின்றன. இதில் கேப்டன் யாரைக் கொண்டு வருவார் என்று எதிர்நோக்கி அதற்குத் தக்கவாறு விளையாட வேண்டும். நாம் சிலவற்றை வெல்வோம், சிலவற்றை தோற்போம். ஆனால் பினிஷர் வேலை பணியை முடிப்பதும், பிறருக்கு உதவுவதும், அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும்தான். விரட்டலில் 2 பந்துகள் மீதம் வைத்தது விநோதம்தான்” என்றார்.

‘சத்தமே உறுமல்’

பெங்களூரு அணியை வீழ்த்திய பின்னர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பதிவில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது. மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான்” என்று தமிழில் பதிவிட்டு அசத்தியிருந்தார்.

5 ஆயிரம் ரன்கள்

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தோனி கடந்தார். கவுதம் கா ம்பீர் (4,242ரன்கள்) 2-வது இடத்திலும், விராட் கோலி (3591) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்த ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஐபிஎல் வராலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

கோலியின் தவறு

சாஹல், உமேஷ் யாதவ் ஆகியோரை 15 ஒவர்களுக்குள் முடித்து விட்டு கடைசியில் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீசினால், என்ன ஆகும், வித்தியாசம் இல்லாத பந்து வீச்சை வலுவான பேட்ஸ்மேன்கள் எந்த முறையில் கையாள்வார்கள் என்பதை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின் வாயிலாக விராட் கோலி உணர்ந்திருக்கக்கூடும். காலின் டி கிராண்ட்ஹோம் அணியில் இருந்த போதிலும் அவரை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும் தவறினார் கோலி.

இது தந்தையின் கடமை

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனியைப் பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் ஜிவாவின் கூந்தலை உலர்த்தும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் போட்டி முடிந்துவிட்டது. நல்ல தூக்கம் தூங்கினேன். தற்போது இது தந்தையின் கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்