குவாஹாட்டி: ஐஎபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவு இல்லாதது என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. எனினும் கடைசியாக விளையாடி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த நிலையில் இன்று தனதுகடைசி லீக் ஆட்டத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி.
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்யும். முதல் 11 ஆட்டங்களிலும் ரன் வேட்டையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் 150 ரன்களை கூட எட்ட முடியாமல் தடுமாற்றம் அடைந்தது.
இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் தாயகம் சென்றுவிட்ட நிலையில் கடந்த ஆட்டத்தில் டாம் கோஹ்லர்-காட்மோர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவரிடம் இருந்து பெரிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. 23 பந்துகளை சந்தித்த டாம் கோஹ்லர்-காட்மோர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். லீக் சுற்றை வெற்றியுடன் ராஜஸ்தான் அணி நிறைவு செய்ய வேண்டுமானால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் மீண்டும் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள வேண்டும்.
லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் அடுத்த சுற்றுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கக்கூடும். இங்கிலாந்தின் பில் சால்ட் தாயகம் திரும்பிவிட்ட நிலையில் தொடக்க வீரராக ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸ் களமிறங்கக்கூடும் அல்லது நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரில் யாரேனும் ஒருவரை தொடக்க வீரராக களமிறக்குவது குறித்து கொல்கத்தா அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.
ஒரு சதம், 3 அரை சதம் உட்பட 182.93 ஸ்டிரைக் ரேட்டுடன் 461 ரன்கள் சேர்த்துள்ள சுனில் நரேன் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றக்கூடும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக ரிங்கு சிங் பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரது சுழலும், ஆந்த்ரே ரஸ்ஸலின் மிதவேகமும், ஹர்ஷித் ராணா, வைபவ்அரோரா, மிட்செல் மார்ஷ் ஆகியோரது வேகமும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஹைதராபாத் - பஞ்சாப் மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் ஆட்டம்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவு இல்லாதது என 15 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தின் முடிவு இரு அணிகளுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும். எனினும் இது ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே அமையும். ஏனெனில் ராஜஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago