பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ளசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன் (சிஎஸ்கே) பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த வரிசையில் 3-வதுஅணியாக தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் இணைந்துள்ளது. நேற்று முன்தினம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணியானது 7 வெற்றி, 5 தோல்வி, ஓர் ஆட்டம் முடிவு இல்லாதது என புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றில் மீதம் உள்ள ஓர் இடத்தை பிடிப்பதற்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணியானது 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 0.387 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியானது கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் நுழைய முடியும். அதிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
» ரோஹித், நமன் திர் அரை சதம் வீண்: 18 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி @ ஐபிஎல்
» நிக்கோலஸ் பூரன் சிக்சர்ஸ் ஷோ - மும்பைக்கு 215 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
உதாரணமாக ஆர்சிபி முதலில் பேட் செய்து 200 ரன்கள் குவித்தால் சிஎஸ்கே அணியை குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் 201 ரன்கள் இலக்கை ஆர்சிபி துரத்தினால் 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற வேண்டும். இதில் 200 ரன்களில் இருக்கும் போது ஆர்சிபி அணி சிக்ஸர் விளாசி வெற்றி பெற்றால் 8 பந்துகள் மீதம் இருந்தால் போதுமானது.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி முதல்8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 6 தோல்வியை சந்தித்தநிலையில் அதன் பின்னர் மீண்டு வந்து கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் அபாரமான வெற்றிகளைகுவித்தது. இந்த 5 ஆட்டங்களிலும் கணிசமான ரன் ரேட்டில் வெற்றி பெற்றதால் தனது கடைசிலீக் ஆட்டம் வரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரரான விராட் கோலி 13 ஆட்டங்களில் ஒரு சதம், 5 அரை சதம் என 155.16 ஸ்டிரைக் ரேட்டுடன் 661 ரன்களை வேட்டையாடி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
நடுவரிசையில் ரஜத் பட்டிதார், கேமரூன் கிரீன், வில்ஜேக்ஸ் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் டு பிளெஸ்ஸிஸ், தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம் ரோர் ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட்டால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். பந்து வீச்சை பொறுத்தவரையில் 13 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள யாஷ் தயாள் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். லாக்கி பெர்குசன், முகமது சிராஜ், கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடியவர்கள்.
சிஎஸ்கே அணியானது இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே எளிதாக பிளே ஆஃப்சுற்றில் கால்பதித்து விடும். அதேவேளையில் தோல்வி அடைந்தாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொண்டாலும் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடலாம். பேட்டிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒருசதம், 4 அரைசதங்கள் உட்பட 583 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர், பேட்டிங் செய்வது பலமாக பார்க்கப்படுகிறது.
டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். தொடரின் முதல் பாதியில் அதிரடியாக செயல்பட்ட ஷிவம் துபே கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவருடன் மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணிக்குகூடுதல் பங்களிப்பை வழங்கலாம். இறுதிக்கட்ட ஓவரில் தோனியின் அதிரடி பலம் சேர்க்கக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். எனினும் பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்கிற்கே சாதகமானது என்பதால் இவர்கள் உட்பட சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் சோதனைக்கு உட்படுத்தப்படக்கூடும்.
மழை அச்சுறுத்தல்… ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று பெங்களூருவில் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரின் சில பகுதிகளில் இன்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டி தொடங்கும் நேரமான இரவு 7.30 மணி அளவில் வெப்பநிலை 23 டிகிரியாக இருக்கும் எனவும் 100 சதவீத மேகமூட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவோ அல்லது போட்டியின் போதோ மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும் சின்னசாமி மைதானம் சிறந்த வடிகால் அமைப்பை கொண்டுள்ளது. மேலும் மழை நின்ற 30 நிமிடங்களுக்குள் மைதானத்தில் உள்ள ஈரத்தன்மையை உலர்த்தும் அதிநவீன அமைப்பும் உள்ளது.
ஓவர் குறைந்தால்… ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. ஒருவேளை மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் ஆர்சிபி அணிக்கு சிக்கல்தான். 5 ஓவர்களை கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டால் சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்து 75 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இந்த இலக்கை ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் அடைய வேண்டும். அதேவேளையில் ஆர்சிபி முதலில் பேட் செய்து 75 ரன்களை சேர்த்தால் சிஎஸ்கே அணியை 57 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
ரத்தானால் அம்பேல்… ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இடையிலான இன்றைய ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இது நிகழ்ந்தால் ஆர்சிபி அணி 13 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். மாறாக சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago