ரோஹித், நமன் திர் அரை சதம் வீண்: 18 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் ஓப்பனராக களமிறங்கிய தேவ்தட் படிக்கல் முதல் ஓவரில் டக் அவுட்டானார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் - கே.எல்.ராகுல் இணைந்து பொறுமையான ஆட்டத்தை கடைபிடிக்க, ஸ்டோனிஸ் 28 ரன்களில் எல்பிடபள்யூ ஆகி கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 11 ரன்களில் அவுட்டானார்.

நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்கவிட, கே.எல்.ராகுலும் தன் பங்குக்கு ரன்களைச் சேர்த்தார். 8 சிக்சர்களை விளாசிய பூரன், 29 பந்துகளில் 75 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். 16ஆவது ஓவரில் அவரை வெளியேற்றினார் நுவன் துஷாரா. அதே ஓவரில் அர்ஷத் கான் டக்அவுட். அதற்கு அடுத்த ஓவரில் ராகுல் 55 ரன்களில் விக்கெட்டானார்.

இறுதியில் க்ருணால் பாண்டியா - ஆயுஷ் படோனி கைகோத்து ரன்களை விரட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 214 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் நுவன் துஷாரா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

215 ரன்கல் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஓப்பனர்களான ரோஹித் சர்மா - டெவால்ட் ப்ரெவிஸ் ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றியது. ரோஹித் 38 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். ப்ரெவிஸ் 23 ரன்களில் நடையை கட்டினார்.

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஏமாற்றவே இஷன் கிஷன் 14 ரன்கள், ஹர்திக் பாண்டியா 16 ரன்கள், நேஹல் வதேரா ஒரு ரன் என மும்பை அணி முக்கியது. 14வது ஓவரில் களமிறங்கிய நமன் திர் அட்டகாசமாக ஆடி 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரி என 68 ரன்களை குவித்து ஸ்கோரை ஏற்றினார்.

இப்படியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆட்டத்தின் முடிவில் நமன் திர், ஷெஃபர்ட் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE