பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இந்திய அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தேர்வு நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் ஆடவர் அணியில் சரத்கமல், ஹர்மீத் தேசாய், மனவ்தாக்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜி.சத்தியன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மகளிர் அணியில் மணிகா பத்ரா, ஜா அகுலா, அர்ச்சனா காமத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அய்ஹிகா முகர்ஜி மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார். தனிநபர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா, ஜா அகுலா ஆகியோரும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE