“தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்” - மைக் ஹஸ்ஸி நம்பிக்கை

By ஆர்.முத்துக்குமார்

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியை சென்னையில் வைத்ததையடுத்து அனைவரும் கருதுவது என்னவெனில் கோப்பையுடன் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்றும் ஒரு பெரிய பிரியாவிடைக்கு ஏற்பாடாகிறது என்றும் ஹேஷ்யங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னாள் சிஎஸ்கே வீரர் மைக் ஹஸ்ஸியோ தோனி இன்னும் 2 ஆண்டுகள் ஆடுவார் என்று நம்புவோமாக என்கிறார்.

இது தொடர்பாக மைக் ஹஸ்ஸி, “இந்த நிலையில் உங்கள் யோசனையும் என் யோசனையும் ஒன்றுதான். தோனி தன் மனதிற்குள் வைத்திருப்பார். வெளியில் சொல்ல மாட்டார். ஆனால் அவர் தொடர்ந்து ஆடுவார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

அவர் இப்பவும் நன்றாக பேட்டிங் ஆடுகிறார். நன்றாகத் தயார்ப்படுத்திக் கொள்கிறார். முகாமுக்கு முன்கூட்டியே வந்து நிறைய பந்துகள் ஆடுகிறார். சீசன் முழுவதுமே அவர் நல்ல டச்சில் இருக்கிறார். அவரது உடலைப் பொறுத்தவரை நாம் அவரை நல்ல படியாகப் பாதுகாக்க வேண்டும். கடந்த சீசனுக்குப் பிறகு தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

என்னுடைய சொந்த கணிப்பின் படி தோனி இன்னும் 2 ஆண்டுகள் ஆடுவார் என்றே கருதுகிறேன். இருப்பினும் அவர் முடிவு என்னவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் தான் எந்த முடிவாயினும் எடுப்பார். இந்த நாடகத்தை இன்னும் கொஞ்சம் கட்டி எழுப்புவார் என்றே நினைக்கிறேன். எனவே அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்கள் தோனி இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறங்கி ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நான் அறிவேன். அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்தான் கடைசியில் இறங்குகிறார். ஆனால் முதல் பந்திலிருந்தே கிளீன் ஹிட் செய்பவர்கள் அவரை அன்றி யாருமில்லை. அவர் மகத்தான வீரர்.

கேப்டன் மீட்டிங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கு ஆச்சரியமே. ஆனால் அவர் ருதுராஜ்தான் கேப்டன் என்பதில் தெளிவாக இருந்தார். இது ஒரு ஆரம்ப அதிர்ச்சிதான். ஆனால் அதன் பிறகு சரியாகிவிட்டது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய போது ருதுராஜ்தான் சரியான நபர் என்பது எங்களுக்குத் தெரிந்தது. தோனி அவருக்கு உதவி புரிய முயற்சிக்கிறார். ஆனால் ஸ்டீபன் பிளெமிங் தான் ருதுராஜின் ரோல் மாடல்.

ருதுராஜ் அமைதியானவர். ஆட்டம் பற்றிய நல்ல சிந்தனையாளர் அவர். தோனியைத் தொடர்ந்து கேப்டன்சியை எடுத்துக் கொள்வதெல்லாம் சாதாரண காரியமல்ல. ஆனால் ருதுராஜ் அருமையாக கேப்டன்சி செய்கிறார். போகப்போக இன்னும் மெருகு அடைவார். எங்கள் தரப்பில் மகிழ்ச்சி என்னவெனில் கேப்டன்சி ருதுராஜின் பேட்டிங்கைப் பாதிக்கவில்லை. பேட்டிங்கில் அபாரமாக ஆடிவருகிறார்.” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE