GT vs KKR | மழையால் ஆட்டம் ரத்து: குஜராத் முதல் சுற்றுடன் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 63-வது லீக் போட்டி மழை காரணமாக ரத்தானது. இதனால் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது.

இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்தது. போட்டி நாளன்று அங்கு தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் டாஸ் கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடித்து வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணி லீக் சுற்றை முதல் இரண்டு இடங்களில் நிறைவு செய்யும் வாய்ப்பு உறுதியாகி உள்ளது. அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் விளையாட வேண்டி உள்ளது.

13 போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. அந்த அணி இதற்கு முந்தைய இரண்டு சீசனில் இறுதிப் போட்டியில் ஆடி இருந்தது. அதில் 2022-ல் சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் விளையாட வேண்டி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE