“கேப்டன்சியில் மாற்றம் இல்லை; வெற்றியில் கவனம்” - லக்னோ துணை பயிற்சியாளர் குளூஸ்னர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இப்போதைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏதும் இல்லை என்றும், அணியின் முழு கவனமும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதில் இருப்பதாகவும் அந்த அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் லக்னோ விளையாடுகிறது. இந்த போட்டி புதுடெல்லியில் நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. அதோடு கே.எல்.ராகுல், கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அணியின் கேப்டன்சியில் மாற்றம் இல்லை என லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார்.

“கேப்டன்சி மாற்றம் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. இரண்டு கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் நடந்த விவாதமாக நான் அதை பார்க்கிறேன். அதில் எந்த சிக்கலும் இல்லை. எங்கள் கவனம் முழுவதும் வெற்றி பெறுவதில் உள்ளது.

நாங்கள் ஐபிஎல் பட்டத்தை வெல்ல விரும்புகிறோம். அதற்கு நாங்கள் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும். தற்போது ஆர்சிபி அதை செய்துள்ளது. நிச்சயம் அது முடிகின்ற காரியம் தான். அதற்கு முதலில் நாளைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.

நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழப்பது கே.எல்.ராகுலின் ஸ்ட்ரைக் ரேட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவரை சுற்றிதான் அணியின் பேட்டிங் யூனிட் உள்ளது. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டெல்லி விக்கெட் விரைந்து ரன் சேர்க்க உதவும். அதனால் எங்களது ஆட்டத்தில் அந்த வேகம் இருக்கும். விக்கெட் விடாமல் இருப்பது மட்டுமே திட்டம்” என அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 இன்னிங்ஸ் ஆடியுள்ள கே.எல்.ராகுல், 460 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 136.09. 12 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE