ஆர்சிபிக்கு முக்கிய ‘ரோல்’ - சிஎஸ்கே அணியின் ‘பிளே ஆஃப்’ வாய்ப்பு கணக்கு என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இன்னும் உயிர்ப்போடு வைத்துள்ளது. இந்தச் சூழலில் எஞ்சியுள்ள ஒரே ஒரு போட்டியில் விளையாடி சிஎஸ்கே அதை சாத்தியம் ஆக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே, நடப்பு சீசனில் 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நெட் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முந்தியுள்ளது சிஎஸ்கே. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் அந்த அணி வெல்வது டாப் இரண்டு அணிகளில் ஒன்றாக இருக்க உதவும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்குச் தகுதி பெற்றுவிட்டது.

சிஎஸ்கே பிளே ஆஃப்? - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சனிக்கிழமை அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவினால் ஆர்சிபி வெற்றி இலக்கை 18.1 ஓவர்களுக்கு முன்னதாக சேஸ் செய்யக் கூடாது அல்லது 18 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் வெற்றி பெறக் கூடாது.

மற்ற அணிகளுக்கான வாய்ப்புகள்: ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ போன்ற அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம். இதற்கு ஆர்சிபி, சென்னையை வீழ்த்த வேண்டும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவ வேண்டும்.

ஹைதராபாத் அணியின் அந்த தோல்வி பெங்களூரு மற்றும் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறவும் உதவும். (இதற்கு பெங்களூரு, சென்னையை வீழ்த்த வேண்டும்). ஏனெனில், லக்னோ ரன் ரெட்டில் படு மோசமான பின்னடைவில் உள்ளது. ரன் ரேட் விஷயத்தில் ஹைதராபாத் அணியின் கை ஓங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறி செல்ல வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE