சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை

By ஆர்.முத்துக்குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக மந்தமாக ஆடி சிஎஸ்கே வெற்றி பெற வழிவகுத்தாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில்தான் உள்ளது.

இப்போது 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே 0.528 என்ற நெட் ரன் ரேட்டுடன் உள்ளது. இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்று நம்பகமானதாக இல்லை. ஏனெனில் இன்னும் ஒரு போட்டி ஆர்சிபியுடன் உள்ளது.

ஆர்சிபி அணி வரிசையாக வெற்றி பெற்று வரும் நிலையில் சிஎஸ்கே இந்தப் போட்டியில் தோற்றுவிட்டால் 14 புள்ளிகளுடன் நின்று விடும். இப்படி 14 புள்ளிகளில் தேங்கும் போது சிஎஸ்கேவைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிகள் பட்டியலில் கேகேஆர், ராஜஸ்தான், சன் ரைசர்ஸ், லக்னோ, ஆகிய அணிகள் சிஎஸ்கேவைக் காட்டிலும் மேலே செல்ல வாய்ப்புள்ளது.

சிஎஸ்கேவின் ஒரே சாதகம் அவர்களது நல்ல ரன் ரேட். ஆர்சிபியை வீழ்த்தினால் சிஎஸ்கே டாப் 4 இடங்களில் இருக்கும். மாறாக ஆர்சிபிக்கு எதிராகத் தோற்றால் சன் ரைசர்ஸ் அணியோ, லக்னோ அணியோ 16 புள்ளிகளுக்கும் கீழ் இருப்பதற்கு சிஎஸ்கே பிரார்த்திக்க வேண்டும். இப்படி ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோற்கும் போது குறைந்த ரன் இடைவெளியில் தோற்க வேண்டும் என்பதும் கட்டாயம். அப்போதுதான் ஆர்சிபி நெட் ரன் ரேட்டை விட சிஎஸ்கே அதிகம் இருக்கும்.

சன் ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்ப ஜெயன்ட்ஸ் முறையே 14 மற்றும் 12 புள்ளிகளில் தேக்கமடைந்து விட்டால் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே, ஆர்சிபி இரு அணிகளும் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன இதில் ஒன்றில் வென்றால் கூட 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப்-ஐ உறுதி செய்யும். இரண்டிலுமே சன் ரைசர்ஸ் வென்றால் டாப் 2 இடங்களில் முடிய வாய்ப்புள்ளது. ஆனால் இரண்டிலுமே சன் ரைசர்ஸ் தோல்வி கண்டால் ஆர்சிபி, சிஎஸ்கே இரு அணிகளுமே 14 புள்ளிகளுடன் பிளே ஆப் செல்ல வழிவகுக்கும்.

ஆகவே ஐபிஎல் நிலவரம் இப்போதைக்கு இப்படித்தான் உள்ளது. சிஎஸ்கே-வுக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகவில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE