2-வது டி20 போட்டியில் அயர்லாந்தை வென்றது பாகிஸ்தான்!

By செய்திப்பிரிவு

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் மற்றும் ஃபக்கர் ஜமான் இணைந்து அபார கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. டக்கர் 51 ரன்கள் எடுத்தார். ஹாரி டெக்டர் 32 ரன்கள் மற்றும் டெலானி 28 ரன்கள் எடுத்தனர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. முதல் 2 ஓவர்களில் சயிம் அயூப் மற்றும் கேப்டன் பாபர் அஸம் விக்கெட்டை அயர்லாந்து பவுலர்கள் கைப்பற்றினர்.

அதன் பின்னர் முகமது ரிஸ்வான் மற்றும் ஃபக்கர் ஜமானும் இணைந்து 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஃபக்கர் ஜமான் ஆட்டமிழந்தார். அஸம் கான், 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான், 46 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தனர். அவர்கள் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினர்.

16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்த தொடரின் கடைசிப் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE