RCB vs DC | டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்களில் வென்றது ஆர்சிபி!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 47 ரன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரஜத் பட்டிதார் 52 ரன்கள், வில் ஜேக்ஸ் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 32 ரன்கள், கோலி 27 ரன்கள் எடுத்திருந்தனர்.

ஆர்சிபி பேட் செய்த போது பல கேட்ச்களை நழுவ விட்டனர் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த அணி விரட்டியது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளையாட முடியாமல் தடையை எதிர்கொண்டார். அதனால் இந்தப் போட்டியில் அக்சர் படேல் அணியை வழிநடத்தினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (இம்பேக்ட் வீரர்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் களம் கண்டனர். முதல் ஓவரில் ஒரு ரன் எடுத்த நிலையில் வார்னர் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் அபிஷேக் போரல் மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் குமார் குஷக்ரா வெளியேறினார்.

10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ். 11-வது ஓவரில் ஸ்டப்ஸ் ரன் அவுட் ஆனார். கேமரூன் கிரீனின் அபார த்ரோ அடித்து அவரை வெளியேற்றினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் டெல்லி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். கேப்டன் அக்சர் படேல் 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 19.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி. இதன் மூலம் 47 ரன்களில் வெற்றி பெற்றது ஆர்சிபி. அந்த அணியின் பவுலர் யஷ் தயாள் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது ஆர்சிபி. இதற்கு முன்னர் 2009 மற்றும் 2016 சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றுள்ளது ஆர்சிபி. 2011 சீசனில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த தொடர் வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது. 13 போட்டிகளில் ஆடி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை ஆர்சிபி பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE