“வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!” - என்ற இந்த வரிகள் அண்மையில் வெளியான தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம் பெற்றிருந்தது. இப்போது அது கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனிக்கு கச்சிதமாக பொருந்தி போகிறது.
அதற்கான காரணம் இது அவரது கடைசி சீசனாக நடப்பு ஐபிஎல் சீசன் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தான். ஆனால், அதற்கான பதிலை தோனி மட்டுமே அறிவார். இந்த நேரத்தில் கால சக்கரத்தை சற்றே பின்னோக்கி ரீவைண்ட் செய்ய வேண்டி உள்ளது.
கடந்த 2021 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதும் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோனி பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்தது, “நான் விளையாடும் கடைசி டி20 போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டா அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளான கால கட்டத்திலோ நடக்கலாம்” என அவரது பாணியில் புதிர் போட்டிருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பங்கேற்றுள்ள தோனிக்கு 42 வயதாகிறது. ராஞ்சியில் இருந்து கிரிக்கெட் கனவோடு புறப்பட்டு வந்தவர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் படைக்காத சாதனைகள் இல்லை, வெல்லாத கோப்பைகள்/பட்டங்கள் இல்லை, பெறாத புகழும் இல்லை, ஈட்டாத செல்வமும் இல்லை. அனைத்துக்கும் மேலாக அவர் பெற்றுள்ள ரசிகர் படைக்கு பஞ்சமும் இல்லை.
» “தன்னலமற்ற தொண்டு மறக்கவியலாது” - முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து
» சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
கிரிக்கெட் உலகில் இதற்கு முன்பு இப்படி ஒரு ரசிகர் படையை எந்தவொரு வீரரும் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு பணம், பேர், புகழ் என அனைத்திலும் உச்சத்தை எட்டியுள்ளார் தோனி. இருந்தும் கடந்த சில சீசன்களாக வயது காரணமாக தடுமாறினாலும், அந்த வலியை வெளிக்காட்டாமல் அவர் களமாடி வருவது ‘அன்பெனும் ஆயுதமாக’ உள்ள அவரது ரசிகர்களுக்காகதான். அதன் காரணமாகதான் அவர் ஆடும் ஆட்டத்தை களத்திலும், தொலைக்காட்சியிலும், மொபைல் போனிலும் கோடான கோடி ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.
அதே நேரத்தில் ஐபிஎல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடும் அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது அதை மறுப்பதற்கு இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளமாகவும் அவர் உள்ளார். அந்த பிராண்ட் வேல்யூவை பார்க்க வேண்டி உள்ளது.
ஒவ்வொரு சீசன் முடிவின் போதும் அவரிடம் ஓய்வு குறித்து கேட்பதும், அவரும் இல்லை என புன்சிரிப்போடு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. கடந்த 2023 சீசனில் கோப்பை வென்ற பிறகு, “ஓய்வு பெறுவதை அறிவிக்க இதுவே சிறந்த தருணம். நன்றி சொல்லிவிட்டு ஓய்வு பெறுவது எனக்கு எளிதான விஷயம். ஆனால், ஒன்பது மாதங்கள் கடினமாக உழைத்து இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாட வேண்டும். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்.
ஆனால், சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பின் அளவு, இன்னும் ஒரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கு நான் அளிக்கும் பரிசாக இருக்கும். இது எனது தொழில்முறை கிரிக்கெட்டின் கடைசிப் பகுதி. ரசிகர்கள், தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திய விதம், அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது” என சொல்லி இருந்தார். ஆக இந்த சீசனை அவர் ஆடுவதே ரசிகர்களுக்காக தான்.
நடப்பு சீசனில் மிகவும் லேட்டாகவே தோனி பேட் செய்ய வருகிறார். இத்தனைக்கும் இந்த சீசனில் சிறப்பாகவே பந்தை மிடில் செய்கிறார். ஆனால், அதற்காக அவர் எந்த இடத்திலும் அணியை பலி கொடுக்க தயாராக இல்லை. தன்னால் என்ன முடியும் என்பதை அவர் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். அதன்படியே அவர் ஆடியும் வருகிறார்.
கடந்த சீசனில் அவருக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. சீசன் முடிந்த கையோடு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இன்னும் அவர் நூறு சதவீத ஃபிட்னஸை பெறவில்லை. அதன் காரணமாகவே அவர் பின்வரிசையில் பேட் செய்ய வருகிறார். ‘நான் தோனி’ என ஆடாமல், தனக்கே உரிய தன்னடக்கத்துடன் ஆடி வருகிறார்.
“தோனியை வைத்து ரிஸ்க் எடுக்க நாங்கள் தயாராக இல்லை. காயத்திலிருந்து மீண்டுள்ள அவரால் சிலவற்றை தான் செய்ய முடியும். அதன் காரணமாக அவரால் எதை சிறப்பாக செய்ய முடியுமோ அதை இந்த சீசனில் செய்து வருகிறார்.
பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்க விடுகிறார். சிறந்த முறையில் கீப்பிங் பணியை கவனிக்கிறார். அவரது அட்வைஸ் புதிய கேப்டனுக்கு பெரிதும் உதவுகிறது. அவர் நீண்ட நேரம் பேட் செய்தால் இழப்பு அணிக்குதான்” என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்தார்.
அதற்கு முந்தைய போட்டியில்தான் தோனியை போற்றி வந்த, அவருடன் விளையாடிய சக வீரர்கள், அவரை தூற்றி இருந்தனர். இத்தனைக்கும் நடப்பு சீசனில் 12 போட்டிகளில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 136 ரன்கள் எடுத்துள்ளார். 11 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். 8 கேட்ச்களை பிடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 226.
தோனியின் ஓய்வு? - தோனி எப்போதும் எதையுமே எதிர்பார்க்காத நேரத்தில் அறிவிப்பார். 2015-ல் ஆஸி. தொடரின் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்ததாக கடந்த 2020-ம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதவும்” என சொல்லி இருந்தார்.
அந்த வகையில் அவர் ஆடும் தொழில்முறை (ஐபிஎல்) கிரிக்கெட்டின் கடைசி போட்டியும் அமையும். அது இந்த சீசனில் அரங்கேற வாய்ப்புகள் அதிகம். அடுத்த சீசனில் மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் ஆடுவதற்கு இன்னும் மூன்று வாய்ப்புகள் உள்ளது. அதில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான லீக் போட்டி. இந்தப் போட்டியில் தோனி ஆடுவது உறுதி.
மற்ற இரண்டு வாய்ப்புகள் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி. அதற்கு சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டி உள்ளது. அது நடந்தாலும் தோனி தனது கடைசி போட்டி குறித்த அறிவிப்பு எதையும் சொல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எதிலுமே ஹைப் ஏற்றி பார்க்கும் மனோபாவம் கொண்ட நபர் அவர் இல்லை. அடுத்த சீசனில் அவர் சிஎஸ்கே அணியுடன் பயணித்தாலும் அது புது ரோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago