T20 WC | “கோலியை தொடக்க ஆட்டக்காரராக களம் காணச் செய்யலாம்” - கங்குலி யோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களம் காண செய்யலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. 12 போட்டிகளில் ஆடி 634 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 70.44 என உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 153.51 என உள்ளது.

“விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக களம் காண செய்யலாம். வியாழக்கிழமை அன்று அவர் ஆடிய விதம் அதற்கு எடுத்துக்காட்டு. விரைவாக 90 ரன்களை எட்டி இருந்தார். கடந்த சில போட்டிகளாக அவரது ஆட்டம் அபார ரகமாக அமைந்துள்ளது.

உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி சிறந்த வீரர்கள் அடங்கியுள்ள அணித் தேர்வாக இருப்பதாக நான் கருதுகிறேன். பேட்டிங் மட்டுமல்லாது பந்து வீச்சும் பலமாக உள்ளது. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நம் அணியில் உள்ளார். அனுபவம் வாய்ந்த குல்தீப், அக்சர் படேல், சிராஜ் உள்ளிட்டவர்களும் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர்களை கொண்ட கலவையாக அணி உள்ளது” என கங்குலி தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அணி ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE