முதல் டி20 போட்டியில் அயர்லாந்திடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

டப்ளின்:டி20 உலகக் கோப்பை நெருங்கும் சமயத்தில் அயர்லாந்துக்கு எதிராக டி20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளது.

டப்ளினில் நேற்று (மே.10) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸை இழந்த பிறகு முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை எடுக்க, அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டி20-யில் ஆடுகின்றன.

2007 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்திடம் தோல்வி கண்டு பாகிஸ்தான் தொடரிலிருந்தே வெளியேறியது. அதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பாப் உல்மரின் மர்மமான மரணம் என்று பாகிஸ்தான் அணி பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதை அவர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

நேற்று, அயர்லாந்திடம் அடைந்த தோல்வி இந்த முறை அதே மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியினருக்கு ‘Deja vu’ முன் அறிகுறிக் காட்சியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம். காரணம், அயர்லாந்து அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள குரூப் ஏ-வில் சேர்க்கப்பட்டுள்ளது.

கேப்டன் பாபர் அஸம் (57 ரன்கள், 43 பந்துகள், 8 பவுண்டரி, 1 சிக்ஸ்) மற்றும் தொடக்க வீரர் சயிம் அயூப் (45 ரன்கள், 29 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்ஸ்) தவிர மற்ற வீரர்களில் பகர் ஜமான் 20 ரன்களை எடுக்க மற்றவர்கள் சொதப்பினர். அசம் கான், ஷதாப் கான் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். இப்திகார் அகமது கடைசியில் இறங்கி 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களையும் ஷாஹின் அஃப்ரீடி 8 பந்துகளில் 14 ரன்களையும் விளாசியதில் ஸ்கோர் 182 ரன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சேஸிங் சுலபமாக இல்லை கடைசி 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்று ஆட்டம் கொஞ்சம் பரபரப்புக்குச் சென்றது. நசீம் ஷா, ஷாஹின் அஃப்ரீடிக்கு தலா ஒரு ஓவர் மீதமுள்ளது. அப்படி இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனதுதான் பாகிஸ்தானின் சோகம். 17-வது ஓவரில் அப்பாஸ், அதிரடி டாக்ரெல் (12 பந்தில் 24 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். முதல் 4 பந்துகளில் 3 ரன்களையே கொடுத்திருந்தார். கடைசியில் ஒரு பவுண்டரியைக் கொடுத்தார்.

இதனையடுத்து 17 பந்துகளில் 28 ரன்கள் தேவை, பால்பர்னி கிரீசில் இருக்கிறார், சாத்திக் கொண்டிருக்கிறார். ஷதாப் கான் அப்போதுதான் ஒரு கேட்ச்சை விட்டார். அது கடினமான சான்ஸ்தான். பிறகு நசீம் ஷா அருமையான ஓவரை வீசி இரண்டு துல்லிய யார்க்கர்கள் மூலம் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் வந்தது. அப்போது அயர்லாந்து வீரர் டெலானி அற்புதமான ஒரு பவுண்டரியை விளாசினார்.

2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாஹின் அஃப்ரீடி 55 பந்துகளில் 77 ரன்களை விளாசிய தொடக்க வீரர் பால்பர்னியை வீழ்த்தினார். ஆனால், புதிதாக இறங்கிய கர்டிஸ் காம்ஃபர், இறங்கியவுடனேயே ரிவர்ஸ் ஷாட் அடித்து பவுண்டரி அடிக்க கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் அப்பாஸ் அஃப்ரீடியினால் வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. ஒரு பந்து மீதமிருக்க அயர்லாந்து ஓர் அரிய வெற்றியைப் பெற்றது. ஆட்ட நாயகனாக 55 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த பால்பர்னி தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அயர்லாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE