ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேற்றம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

இதில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மட்டுமே, மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் லக்னோ அணி, ஹைதராபாத்திடம் தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது.

மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன. கடைசி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாய்ப்பில்லை. இதையடுத்து போட்டியிலிருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE