டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 26வது போட்டி புதிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரின் (93 நாட் அவுட்) காட்டடி தர்பாரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி புத்தெழுச்சி கண்டு, தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி கண்டது.
இன்றைய போட்டியில் கம்பீர் ஆடவில்லை, அவர் நீக்கப்பட்டாரா? அவரை விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனரா? அல்லது அவரே உட்கார்ந்து கொள்கிறேன் என்றாரா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் டெல்லி அணிக்கு இந்த வெற்றி புதிய அத்தியாயத்தின் தொடக்கமா என்பது போகப்போகத்தான் தெரியும், இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. 24 வயது இளம் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யரும் இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஆகச்சிறிய மைதானமான டெல்லியில் தினேஷ் கார்த்திக் எதிரணியை பேட் செய்ய அழைத்து தவறிழைத்தார், காரணம் கவுதம் கம்பீரை இழந்து பெரும் குழப்பத்தில் இருந்த டெல்லி அணிக்கு எதிராக ஒரு 200 ரன்கள் பக்க இலக்கை நிர்ணயித்து பிறகு அருமையான ஸ்பின்னர்களைக் கொண்ட கொல்கத்தா டெல்லிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் தன் முடிவில் ஏதோ தவறு செய்துவிட்டதாகவே படுகிறது. டெல்லி அணி முதலில் பேட் செய்து 14 ஓவர்களில் 127/2 என்று தான் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் 92 ரன்கள் விளாசியதற்குக் காரணம் ஷ்ரேயஸ் அய்யர், இவர் 10 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் திகழ்ந்தார். 219/4 என்று முடிந்த டெல்லி அணி பிறகு கொல்கத்தாவை 77/5 என்று பின்னடைவு காணச்செய்து கடைசியில் 164/9 என்று மட்டுப்படுத்தியது.
ஷ்ரேயஸ் அய்யர் ரன்களைச் சேர்ப்பவராகத்தான் நாம் அறிந்திருக்கிறோம், அப்படித்தான் இன்று சேர்த்துக் கொண்டு வந்தார், ஆனால் திடீரென அரைசதம் கடந்த பிறகு வாங்கு வாங்கென்று வாங்கினார், ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசித் தள்ளினார் அய்யர். இதனால் டெல்லி இந்த சீசன் ஐபிஎல்-ன் அதிகபட்ச ஸ்கோரான 219 ரன்களை எட்டியது.
கம்பீர் நீக்கம், கொலின் மன்ரோ, பிரிதிவி ஷா அபாரத் தொடக்கம்:
தான் பரிந்துரை செய்த கேப்டன் தன்னை அணியிலிருந்து நீக்குவார் என்று கம்பீர் எதிர்பார்த்தாரா என்பது தெரியவில்லை, கொலின் மன்ரோ சேர்க்கப்பட்டார். பவர் ப்ளேயிலேயே புதிய கூட்டணியின் அவசரம் தெரிந்தது, இதற்கு முன்பாக பவர் ப்ளேயில் 48 ரன்களைத்தான் அதிகபட்சமாகக் கண்ட டெல்லி இன்று மன்ரோ, பிரிதிவி ஷா மூலம் 57 ரன்கள் கூட்டணி கண்டது. இதில் 40-45 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்தது. மன்ரோ 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் அடிக்க பிரிதிவி ஷா 7 அருமையான பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 44 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.
மன்ரோ, ஷிவம் மாவியின் வேகத்துக்கு பவுல்டு ஆனவுடன் 3ம் நிலையில் இறங்கினார் ஷ்ரேயஸ் அய்யர். முதலில் ரன்களைச் சேகரித்தார், எதிர்முனையில் செட்டில் ஆன பிரிதிவி ஷா, மிட்செல் ஜான்சன் வேகத்தை அபாரமாக ஆடினார், மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி, எக்ஸ்ட்ரா கவர் மேல் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக் மேல் அதியற்புதமான சிக்ஸ் என்று ஜான்சனை திகைக்க வைத்தார் பிரித்வி ஷா. பிறகு சாவ்லாவின் எழும்பாத ஷூட்டர் பந்தில் பவுல்டு ஆனார்.
2 பந்துகள் சென்று ரிஷப் பந்த் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ரஸலின் எகிறு பந்து இவரது கிளவ்வில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனது. 129/3 என்ற நிலையில் மேக்ஸ்வெல், அய்யர் இணைந்தனர்.
கொல்கத்தா விட்ட கேட்ச்களும் அய்யர் புகுந்த கதையும்!
பந்த் அவுட் ஆகும் போது அய்யர் 23 பந்துகளில் 33 என்று இருந்தார். ஆனால் அதே 15வது ஓவரில் ரஸலின் கடைசி 2 பந்துகளில் ஒன்றை பேக்வர்ட் பாயிண்டில் திருப்பி விட்டு பவுண்டரியும் அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆஃபில் ஒரு டென்னிஸ் ஃபோர்ஹேண்ட் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். சாவ்லா தன் 4வது ஓவரில் வெறும் 3 ரன்களையே கொடுத்தார்.
17வது ஓவரை ஷிவம் மாவி வீச ஷார்ட் பிட்ச் பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்தார் அங்கு உத்தப்பா கேட்சை விட்டதோடு பந்து பவுண்டரியைக் கடந்து சென்று 6 ரன்களானது. கையின் ஊடாக சிக்சருக்கு விட்டார் உத்தப்பா இதுதான் பெரிய காஸ்ட்லி மிஸ் ஆனது, 29 பந்துகளில் அரைசதம் கண்டார் அய்யர். அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு லாங் ஆஃபில் தூக்கி சிக்ஸ் அடித்தார் ஷ்ரேயஸ். 18வது ஓவரை நரைன் வீச அதில் ஒரு பந்தை லாங் மேல் தூக்கி அடித்தார் ஷ்ரேயஸ், இம்முறை நிதிஷ் ராணா கையைத் தூக்கி பந்தை கேட்ச் ஆக்க நினைத்தார், ஆனால் பந்து கையைக் கடந்து சிக்ஸ் ஆனது. இதுவும் நல்ல வாய்ப்புதான். அதே ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு பந்தை உருப்படியாக மிடில் செய்து லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். நரைன் 3 ஓவர்கள் 35 ரன்கள் என்று முடிந்தார்.
மிட்செல் ஜான்சன் 19வது ஓவரை வீச மேக்ஸ்வெல் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக்கில் சிக்ஸ் அடித்து பிறகு கடைசி பந்தை பவுலர் தலைக்கு மேல் நான்கிற்குத் தூக்கினார். 190/3 என்ற நிலையில் ஷிவம் மாவி கடைசி ஓவரைத் தொடங்க ஷ்ரேயஸ் தாண்டவம் தொடங்கியது. முதல் பந்தை ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர் மேல் சிக்ஸ் தூக்கினார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்ப் திசையில் ஒதுங்கி லாங் மேன் ஒரே தூக்கு சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து மேக்ஸ்வெல் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். மீண்டும் ஒரு மாவி ஷார்ட் பிட்ச், இம்முறை மிட்விக்கெட்டில் சிக்ஸ். மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து லாங் ஆஃபில் ஒரு நான்கு. கடைசி பந்து மீண்டும் ஷார்ட் பிட்ச், லாங் ஆஃபில் சக்தி வாய்ந்த சிக்ஸ். மாவி போன்ற இளம் வீரர்களிடம் கடைசி ஓவரிக் கொடுக்கலாமா? ஸ்கோர் 219 ரன்கள் ஆனது. மாவி 4 ஓவர்களில் 58 ரன்கள். ஐயர் 40 பந்துகளில் 10 சிக்சர்கள் 3 பவுண்டரிகள். இதில் மாவியை மட்டும் 6 சிக்சர்கள் விளாசினார் ஷ்ரேயஸ்.
கொல்கத்தா வீழ்ச்சி:
கொல்கத்தா அணி 2வது ஓவரில் கிறிஸ் லின் (5) விக்கெட்டை கிளென் மேக்ஸ்வெலின் ரவுண்ட் த விக்கெட் பந்துக்கு பவுல்டு முறையில் இழந்தது, அங்கு மேக்ஸ்வெலை கொண்டு வந்தது நல்ல கேப்டன்சி. பலன் அளித்தது. சுனில் நரைன் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசி 9 பந்துகளில் 26 ரன்கள் என்று குட்டிப்புலியாக ஆடினார், ஆனால் போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துக்கு வேறு ஸ்ட்ரோக் எதுவும் ஆட முடியாத நரைன் ஒதுங்கிக் கொண்டு சுற்றினார் அய்யரிடம் கேட்ச் ஆனது, முன்னதாக டிரெண்ட் போல்ட் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் உத்தப்பாவை 1 ரன்னில் வீழ்த்த 3 ஓவர்களில் 33/3 என்று ஆனது கொல்கத்தா.
கொல்கத்தாவின் சிறந்த வீரர் நிதிஷ் ராணாவுக்கு இளம் வேகப்புயல் ஆவேஷ் கான் 142 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீச பந்திலிருந்து கண்ணை எடுத்து ஷாட் ஆடினார், அது ஆவேஷ் கானிடமே கேட்ச் ஆனது. தினேஷ் கார்த்திக் அமித் மிஸ்ராவின் லெக் ஸ்பின் பந்தை ரீச் செய்து அடித்தார், பந்து சரியாகச் சிக்காமல் பாயிண்டில் கேட்ச் ஆனது. 77/5.
அண்டர்19 கண்டுபிடிப்பான ஷுப்மன் கில், ஆந்த்ரே ரஸல் இணைந்து 6 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் தனது முழுத்திறமையைக் காட்டி 29 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து அய்யர்/பந்த் கூட்டணியில் ரன் அவுட் ஆனார். இது ஒரு நல்ல இன்னிங்ஸ். வேறு ஒரு இலக்காக இருந்தால் இது நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு இன்னிங்ஸாகியிருக்கும்.
ரஸல் 30 பந்துகளில் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தாலும் கடைசியில் ஆவேஷ் கான், பிளெங்கெட் ஆகியோரை ஒன்றும் செய்ய முடியவில்லை, மட்டையைச் சுத்து சுத்தென்று சுற்றினார் மாட்டவில்லை கடைசியில் ஒரு பந்து பவுல்டு ஆனது. ஆனால் ரஸல் அவுட் ஆகிச் செல்லும் போது தேவையில்லாமல் ஆவேஷ் கான் ஏதோ கூற ரஸல் என்ன இது? என்பது போல் பார்க்க ஆவேஷ் கானும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது போல் செய்தார். 164/9 என்று முடிந்தது.
டெல்லி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியான் பிளெங்கெட் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 24 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆட்ட நாயகனாக ஷ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார்.
புது கேப்டன், புது உத்வேகம், புத்தெழுச்சி ஆகியவை டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago