மே.4, இன்றைய தினம் இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானுவைக் கவுரவித்து டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். 1940 - 50 காலகட்டத்தில் ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒரு விளையாட்டுத் துறையில் ஹமீதா பானு காலடி எடுத்து வைத்ததை நினைவு கூறும் வகையில் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
துணிச்சல்காரி ஹமீதா! "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" இப்படி ஒரு சவாலை விடுத்தவர் தான் ஹமீதா பானு. அதுவும் 1954 ஆம் ஆண்டில் இத்தகைய துணிச்சலான சவாலை விடுத்தார். அந்தச் சவாலை அவர் விடுத்த பின்னர் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவின் பிரபல மல்யுத்த வீரரையும், கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பிரபல வீரரையும் அடுத்தடுத்து தோற்கடித்தார் என்கிறது வரலாறு.
அதே ஆண்டு மே மாதம் ஹமீதா பானு குஜராத்தின் வதோதராவில் தனது மூன்றாவது போட்டியை எதிர்கொண்டுள்ளார். அந்தப் போட்டியில் அவரை எதிர்க்க வேண்டிய நபர் கடைசி நிமிடத்தில் விலகிக் கொள்ள அடுத்த போட்டியாளரான பாபா பஹல்வானை அவர் எதிர்கொண்டார்.
ஆனால் அந்தப் போட்டி வெறும் 1 நிமிடம் 34 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. ஹமீதா வெற்றி பெற்றுள்ளார்.
ஹமீதா ஏன் அத்தனை பிரபலமானார்? ஹமீதா ஊரெங்கும் அத்தனை பிரபலமாக அவரது அஜானுபாகு உடல் கட்டமைப்பும் ஒரு காரணமாக இருந்துள்ளது. 108 கிலோ எடை, உயரம், அவரது உணவுப் பழக்கவழக்கம் என எல்லாமே செய்தியானது. ஹமீதா ஒரு நாளில் 5.6 லிட்டர் பால், 1.8 லிட்டர் பழச்சாறு, 6 முட்டைகள், 2.8 லிட்டர் சூப், 1 கிலோ ஆட்டிறைச்சி, பாதாம், அரைக் கிலோ வெண்ணெய், பிரெட், இரண்டு ப்ளேட் பிரியாணி உண்பார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மக்களை அவர் மீது ஆர்வம் கொள்ள வைத்தது.
» சின்னசாமி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: ஆர்சிபி-க்கு பதிலடி கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ் அணி?
» ‘கடைசி பந்தில் விக்கெட் கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை’ - பாட் கம்மின்ஸ்
1987-ல் மஹேஸ்வர் தயால் எழுதிய ஒரு புத்தகத்தில் ஹமீதா பானு பற்றிய ஊடகச் செய்திகளை அவருக்கான போட்டியாளர்களை நாடு முழுவதுமிருந்து ஈர்த்துக் கொண்டு வந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் சில ஊர்களில் ஹமீதாவுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. புனேவில் அவர் ராமச்சந்திரா சலுங்கே என்ற மல்யுத்த வீரை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் உள்ளூர் மல்யுத்த கூட்டமைப்பு பெண் போட்டியாளருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் போட்டியே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு தருணத்தில் ஆண் போட்டியாளரை வெற்றி கண்டதற்காக ஹமீதா பானு மீது பார்வையாளர்க கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய ஹமீதா: 1954ல் ரஷ்யாவின் பெண் கரடி என்றழைக்கப்பட்ட வெரா சிஸ்டிலினை ஹமீதா பானு வீழ்த்தினார். உலகப் புகழ் பெற்ற வெரா சிஸ்டிலினை 1 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஹமீதா வெற்றி கண்டார். மும்பையில் நடந்த இந்தப் போட்டி அவர் வாழ்க்கையின் முக்கிய அத்தியாயமாக அமைந்தது. அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நிறைய வீரர்களை எதிர்கொள்ள அவர் விரும்பினார்.
கடினமான தனிப்பட்ட வாழ்க்கை.. ஆனால் பானுவின் பயிற்சியாளர் சலாம் பஹல்வான் அவர் ஐரோப்பா செல்வதை விரும்பவில்லை என ஹமீதாவின் பேரன் ஃபெரோஷ் ஷேக் ஒரு ஊடக்ப் பேட்டியில் கூறியிருக்கிறார். சலாம் அடித்ததில் பானுவின் கால் எலும்பு முறிந்து அவரது ஐரோப்பிய கனவு இருண்டுபோனது என்று ஹமீதாவின் அப்போதைய அண்டை வீட்டுக்காரர் ரஹில் கான் ஓர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ஹமீதாவால் தடியின் உதவியில்லாமல் நடப்பதே பல ஆண்டுகளுக்கு கடினமாகியுள்ளது. அலிகாரின் அமேசான் என்ற அடைமொழியில் அழைக்கப்பட்ட ஹமீதா பானுவின் வெற்றிப் பயணமும் அது தடைபட்டு போன சோகமும் நினைவு கூரத்தக்கது.
ஹமீதாவைப் பற்றிய கூகுள் டூடுல் விவரிப்பில், “ஹமீதா பானு அவர் காலத்தில் தனக்கென தனி வழி வகுத்து மிளிர்ந்தவர். அவருடைய துணிச்சல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. விளையாட்டைத் தாண்டியும் அவர் தனக்குத்தானே உண்மையாக நடந்துகொண்ட விதத்துக்காகவே அவர் எப்போதும் கொண்டாடப்படுவார்” என சிலாகித்துக் குறிப்பெழுதியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago